‘முத்தியை விரும்புவையாயின் காஞ்சியை எய்தி முன்னர் எம்மைத் தாபித்துப் போற்றி வரம் பெற்ற அத்தலத்தில் பெறுக’ என்றருள் புரிந்து மறைந்தனர். எம் பெருமானார்க்குப்பேரன்பினனாகிய வாணனும் காஞ்சியை அடைந்து தான் தொழுது துதிக்கும் நித்தனார் திருவருளாற் கணத்தலைமையைப் பெற்று நிலைபேறுடைய இன்பிற்றிளைத்தனன். வரிச்சி றைச்சுரும் புளர்தரக் குவிமுகை முறுக்குடைந் தலர்வாசம் விரித்த நெட்டிதழ்ப் பங்கயப் பொய்கைசூழ் வியத்தரு வாணேசம் அருச்ச னைக்குரி மரபினிற் போற்றிசெய் அடியவர் கருத்தீமை நரிச்சு நீங்கமெய்ப் பெருநலக் கிழமைவீ டெய்துவர் நமரங்காள். | அழகிய சிறையினையுடைய சுரும்புகள் குடையக் குவிந்த அரும்புகள் பிணிப்பவிழ்ந்து அலர் வாசம் பரவுகின்ற நீண்ட இதழ்களைக் கொண்ட தாமரை மலர்ப்பொய்கை சூழ்ந்த அற்புதத்தலமாகிய வாணேசம் வழிபாடு செய்தற்குரிய விதிப்படி போற்றி செய் அடியவர் பிறவி நோய் நைந்து நீங்க உண்மையாகிய பேரின்பத்துக்குரிய வீட்டினைத் தலைப்படுவர் நம்மனோராகிய முனிவர்களே! வாணேசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-1461 திருஓணகாந்தன் தளிப் படலம் கலி விருத்தம் பேண வல்லார் பிறவி தீர்த்தருள் வாண நாத மரபு சொற்றனம் யாணர் வண்மை பெறும்இ தன்குணக் கோண காந்தன் தளிஉ ரைத்துமால். 1 | போற்ற வல்லவர் பிறவியைத் தவிர்த்தருள் வாணேசப் பெருமான் வழக்காற்றினைக் கூறினோம். இனி, அழகிய வளம் பெறும் அதன் கீழ்த்திசையில் உள்ள ஓண காந்தன் றளியை உரைப்போம். மருவ லார்தாழ் வாணன் றன்னுடைப் பொருவில் சேனைத் தலைமை பூண்டவர் தரும வாற்றின் ஒழுகு தானவர் இருவர் ஓணன் காந்தன் என்றுளார். 2 | |