44காஞ்சிப் புராணம்


     திரண்டகொங்கைமேல் கச்சும் நறுமணப் பொருளும் அணிந்த பாத்தியர்,
‘எம்முடைய அவயவ அழகைக் கொள்ளை கொண்டீர்கள்’ என்று சினந்து
ஒலிக்கும் சங்கு, சேல்மீன், பவளம், வெண்முத்து முதலியவற்றைப் பிறர்
கொள்ள விலைப்படுத்தினமையால் மகிழ்ச்சி மீக்கூர்வர். அம்ம,
வியப்பிடைச்சொல்.

கண்ணெழில் கவர்ந்தகடல் மீன்களை உணக்கும்
உண்ணமிழ்த மன்னமட வார்பறவை ஓப்பும்
பண்ணிசை மடுப்பவிழை பவ்வமும் அருக்கன்
விண்ணெழு பகற்பொழுதில் மெல்லென ஒலிக்கும்.    123

     கண்ணினழகைக் கவர்ந்த மீன்களை உலர்த்து நெய்தல் நில மகளிர்
மீன்களைக் கவரவரும் பறவைகளை ஓட்டும் பாடற் பண்ணைச் செவிமடுப்ப
விரும்பிக் கடலும், சூரியன் விண்வழிச்செல்லும் பகலில் மெல்லென ஒலிக்கும்.

தணந்தவர்கள் ஆருயிர் வருத்தவிறல் சாற்றி
மணந்தழுவு தும்பைமலர் சூடிஅடல் மாரன்
அணங்கமர்செய் காலமென ஓர்ந்துமுர சாழி
இணங்குற இராப்பொழுதின் மிக்கொலி எழுப்பும்.    124

     தம்மிற் பிரிந்துறைகின்ற காதலர் அரிய உயிரை வருத்த விருது கூறித்
தும்பை மலரைச்சூடி மன்மதன் பொருகின்ற காலம் இதுவென எண்ணி அவன்
முரசாகிய கடல் இராப்பொழுதில் மிக்கொலிக்கும்.

வீழ்ந்தவர் தணத்தலின் விழிப்புனல் உகுத்துத்
தாழ்ந்தழு திரங்குமட மாதர்தமை நோக்கி
ஆழ்ந்தகழி மாதும்உடன் நின்றழுவ தென்னச்
சூழ்ந்துபுள் அரற்றமலர் தேத்துளி துளிக்கும்.       125

     விரும்பிய தலைவர் பிரிந்துறைதலின் கண்கள் நீரைச்சொரிந்து
துன்பத்திலழுந்தி அழுது இரங்கும் தம்மை நோக்கி ஆழ்ந்த கழியாகிய
பெண்ணும் உடன்நின் றழுதல்போலப் பறவைகள் அரற்றத் தேனைச் சிந்தும்
(கண்ணீர் சிந்தும்).

     பெண்ணிற்குப் பெண் இரங்குவதியல்பு என விளக்கும்.

நலம்பயில் பொருட்குமலி வங்கமிசை நண்ணும்
புலம்பர்வரு கின்றவழி நோக்கினர் புலம்பி
இலம்படு மடந்தையர்கள் இன்னுயிர் தளிர்ப்ப
அலம்புகுளிர் பூந்திவலை வீசும்அலை வாரி. 126

     பொருள்வயிற் பிரிந்து மரக்கலத்திற் சென்ற நெய்தல் நிலத்தலைவர்
வரும் வழிமேல் விழிவைத்து நோக்கிப் புலம்பும் மடந்தையர் இனிய உயிர்
தழைப்பக் குளிர்ந்த மெல்லிய நீர்த்திவலைகளை அலைக்கையால் வீசும் கடல்.