தலைவனே செல்வம் ஆகலின், அவனின்மையை வறுமை என்பார் இலம்படுமடந்தையர் என்றனர். ‘அறஞ்சாரா நல்குரவு’ (திருக்.1047) எனவே, ‘அறஞ்சார் பொருள்’ ஆவது அறத்தொடுகூடுதல். காரண காரியங்களுள் ஒன்றாய் அமைதல். புன்புற மதத்தரும் வியந்துபுகழ் செய்ய என்பைஒரு பெண்ணென இயற்றுநகர் ஒற்றி நன்பதி முதற்பல உடுத்தநளி நெய்தல் தன்பெருமை யாவர்அள விட்டறி தரத்தோர். 127 | சமணர் முதலானோரும் வியந்து, ‘எங்கும் இலை’ என்று புகழ எலும்பைப் பூம்பாவையென்னும் பெண்ணாக்குதற் கிடனாகிய திருமயிலை, திருவொற்றியூர் முதலாய நற்பதிகளைக்கொண்ட குளிர்ந்த நெய்தல் நிலத்தின் பெருமையை யாவரே அளவிட்டு முற்ற அறியுந்தரத்தினர்? ஒருவரும் இலர். திணை மயக்கம் அறுசீரடி யாசிரிய விருத்தம் திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைந் திணைவளமுந் தெரித்துக் காட்ட, மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றை நகர்க் குலக்கவியே வல்லான் அல்லால், கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார் கலந்தார்க் கின்பம், அருத்தொண்ட ரணியில் அவை ஒன்றோடொன் றியைந்தனவும் ஆங்காங் குண்டால். 128 அழகிய நல்ல தொண்டை நாட்டு நால்வகை நிலங்களின் இயல்புகளையும், ஐவகைத்திணைகளின் இயல்புகளையும் வளத்தொடும் விளக்கி உணர்த்தவேண்டின், குன்றத்தூரில் தோன்றியருளிய பெருங்கவிஞர் ஆகிய சேக்கிழார் பெருமானாரே வல்லர் ஆவர். என்னெனின் திருவருள் பெற்ற தொண்டர் ஆகலின், பிறவி நெறிக்கு வயத்தராகிய பிறர் எங்ஙனம் ஆராய்ந்துரைப்பார். கலந்தார்க்கு இன்பத்தை ஊட்டுகின்ற புவியில் அவ்வொழுக்கங்கள் தம்முட் கலந்து தலை மயங்குதலும் அவ்விடங்களில் உளவாம். கலந்தார் -முற் பிறவிகளிலும் அன்பு செய்தும் செயப்பெற்றும் வருந் தலைவன் தலைவியர், தரணி-நோயை நுகர்ச்சியால் கடப்பித்தலின், புவிக்குத் தரணி எனக் காரணக்குறியாயிற்று. இன்பம் கூறவே துன்பமும் உடன் கொள்ளப்படும். ‘துன்புள தெனின் அன்றோ? இன்புளது? இன்பம் அருத்து ஒள் தரணி எனப்பிரிக்க வேண்டும். வரைப்பிண்டி மலர்தூவி வனப்பலா செதிர்சொரிந்த மலருள் மூழ்கி, நிரைக்கும்பூங் கணைதூவி மதன்எம்மான் விழிநெருப்புள் நிற்றல் காட்டும், வரைத்துன்று கறிக்கொடிபோய்க் கடுக்கைமிசை மரகதத்தோ ரணம்போல் தாவி, நிரைக்கிள்ளை வாரணமும் எதிர் நடப்பப் பொருநர்நெடுங் கயிறு காட்டும். 129 |