456காஞ்சிப் புராணம்


     வெற்றியையுடைய வடித்த வேலேந்திய முருகக் கடவுளும், வலிய
யானைமுகமுடைய பிரானாரும் சினங்கொண்டவரைப் போல ஓடி
இருகைகளையும் பற்றியவராய் நாய் கவ்வும்படி இருபுறத்தும் வளைத்துக்
கொள்ள அச்சிவ குமாரர் தம் வெற்றி மிகுந்த திருக்கைகளில் அகப்பட்ட
சிறந்த தவத்தையுடைய பரசிராமனை நோக்கி,

அந்தோ பாவம் ஐயம் இரக்கும் பார்ப்பான்நீ
நொந்தாய் போலும் என்று நுவன்றங் கிமவெற்புத்
தந்தாள் வெவ்வாய் நாயை விலக்கத் தவநோன்பின்
நந்தா வாய்மை இராமனும் நம்மான் முகம்நோக்கி.    15

     ‘‘அந்தோ! பாவம்! பிச்சை வேண்டும் பார்ப்பானே! நீ நொந்தனை
போலும்” என்று கூறி இமயவல்லியார், கொடிய வாயினையுடைய நாய்களை
விலக்கிய போதில் தவ விரதத்திற் கெடாத இயல்பினையுடைய பரசிராமனும்
நம் பெருமான் திருமுகத்தைப் பார்த்து,

மேற்படி வேறு

எனைப்புடை உற்றாய் தீண்டுவ தென்ஈ தறன்அன்றால்
உனக்கிது பாவங் காண்என எங்கோன் உறுபாவம்
நினக்குள தோசொல் எனக்குள தோநீ தான்யாரே
எனக்கொரு கேள்போல் தோன்றிடு கின்றாய் என அன்னோன்.  16

     “என் மருங்கில் நெருங்கினை; மேலும் தீண்டுதல் என்னை; இது
தருமம் அன்று. உனக்கிச் செயல் பாவம் ஆகும்” என, எம்பிரான் அடையும்
பாவம் நினக்குள்ளதோ? எனக்குள்ளதோ? சொல். ‘நீ யாரோ? ‘எனக்கோர்
உறவினன் போலக் காணப்படுகின்றாய்’ என்றருள, அப்பரசிராமன்,

     புண்ணிய பாவங்கள் உயிர்களுக் கன்றித் தனக்கில்லை என்றனர்.
இறைவன் உறவினன்: ‘அப்பன் நீ’ தாண்டகம் காண்க.

என்னிது சொற்றனை யான்சம தக்கினி என்பான்றன்
நன்மகன் ஆகுவன் நீபுலை யோன்எனை நாணாமே
உன்னுற வாக உரைத்தது நன்றென ஒப்பில்லான்
மன்னிய சீர்ச்சம தக்கினி தன்மகன் நீயேயோ.     17

     ‘என்னே இங்ஙனம் கூறினை. யான் சமதக்கினி முனிவர்க்குச்
சற்புத்திரன் ஆவன். நீ புலையோன் ஆவை. என்னை நாணமின்றி
உன்னுடைய உறவினனாகக் கூறுதல் நன்று’ என்ன, உவமையில்லா தான
நிலைபெற்ற சிறப்பினையுடைய ‘சமதக்கினி முனிவர் மகன் நீதானோ!’

கழிய எனக்குற வாயினை ஐய மிலைக்கண்டாய்
இழிவற நின்னை அளித்த இரேணுகை என்பாள்என்
பழுதறு சீர்மனை யாட்கினி யாளாம் பரிசாலே
விழுமிய நீயும் எனக்கினி யாய்காண் எனவிண்டான்.   18