பரசிராமேச்சரப் படலம் 457


     ‘எனக்கு நெருங்கிய உறவினன் ஆனாய். சிறிதும் சந்தேகம் இல்லை.
உயர்வுற நின்னை ஈன்ற இரேணுகை என்று சிறப்பிக்கப்படுவோள் குற்றமற்ற
சிறப்புடைய என் மனையாளுக்கு இனியளாம் இயல்பினாலே சிறந்த நீயும்
எனக்கினியை; இதனை அறிதி’ என விளம்பினர்.

இராமன் நெருப்பெழ நோக்கி வெகுண்டனன் எல்லாரும்
பராவுறு வேதியன் என்எதிர் பார்த்திது சொற்றாய்க்கு
விராவிய தண்டம்உன் நாக்கரி விக்கும் அதேயன்றித்
தராதல மேற்பிறி தில்லென லோடுந் தலைவன்றான்.   19

     பரசிராமன் கண்கள் தீயுமிழப் பார்த்து வெகுண்டு ‘யாவரும் போற்றும்
வேதியன் ஆம் என்முன் நின்று இதுகூறிய உனக்குப் பொருந்திய தண்டம்
உன் நாவை அரிவிக்கும் அஃதே அன்றி உலகில் வேறில்லை என்னலும்’
தலைவன்,

யாவரும் அச்சுறு தாய்கொலை ஏன்றுசெய் மாபாவி
ஓவில் அருட்குணம் ஒன்றிலை என்புடை வல்லாயேல்
நாவரி வாய்சிர மும்அரி வாய்இனி நாணாய்கேள்
ஓவறு கேளிர் தமைத்தழு வாதவர் ஆர்உள்ளார்.     20

     எத்துணைக்கொடியரும் அஞ்சும் தாய் கொலையை மனம் இயைந்து
செய்த பெரும் பாவீ! நீங்கரிய அருட்குணம் சிறிதும் இல்லை. வல்லமை
உடையையாயின் என்பால் நாவையும் அரிவாய்; சிரத்தையும் தடிவாய்;
நாணிலி! இனிக்கேள். நெருங்கிய உறவினரைத் தழுவாதவர் யாவர்
உலகினில் உள்ளனர்.

பாம்புட னேனும் பழமை விலக்கார் தமரானோர்
வேம்பினை ஒப்பக் கைப்பினும் விள்ளார் உலகத்தோர்
தோம்பல பேசிச் சுற்றம் வெறுக்குங் கொடியோனைத்
தேம்பிடும் வண்ணஞ் செற்றிடல் வேண்டும் எனவெம்பி   21

     உலகவர் பாம்புட னெனினும் பழகிய நட்பைக் கைவிடார்.
உறவினர்வேம்பு போலக் கைக்கும் செயலைப் புரிந்தாலும் கைவிடார்.
அவ்வாறாகக் குற்றம் பல கூறிச் சுற்றத்தை வெறுக்கும் கொடியோனாகிய
உன்னை மெலியும்படி தாக்குதல் வேண்டும்’ எனக்கூறி வெதும்பி,

     “பேயோடு பழகுறினும் பிறிவதரி தரிதென்று, தூயோர்கள் மொழிவர்’’
(குசேலோபாக்கியானம்) ‘‘கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கைக்கொள்வர்’’
(திருவாசகம்).

சுணங்கனை யெல்லாம் மேற்செல ஏவித் துரிசோதிக்
கணங்கெழு கல்லும் ஓடும் எடுத்துக் கடிதோச்சி
அணங்கொரு பாலான் எறிவுழி அம்மா முனிவெந்தீ
இணங்க வெகுண்டான் தண்டம் எடுத்தான் புடைவீசி.  22