46காஞ்சிப் புராணம்


     குறிஞ்சிக் குரிய அசோக மரம் மலரைத்தூவிக் கொண்டுள்ள
அந்நிலையிலே, முல்லைக்குரிய முள்முருக்கமரம் பொழியும் மலர் மழையில்
மூழ்கிய காட்சி மன்மதன் மலர்க்கணையைத் தூவிச் சிவபெருமான் திருநுதல்
நோக்கில எழுந்த நெருப்பில் மறைந்த காட்சியை நினைவுபடுத்தும்; மலைக்
குரிய மிளகுக்கொடி செறிந்து மரகதத்தோரணம் போல முல்லைக்குரிய
கொன்றை மரத்தில் படர்ந்து, வரிசையாகக் கிளிகளும் கானங் கோழிகளும்
எதிர் எதிர் அதன்மேல் நடத்தல் கழைக்கூத்தாடி கயிற்றின் மேல் நடத்தலை
ஒக்கும்.

     குறிஞ்சியோடு முல்லைக்கு மயக்கம் கூறப்பட்டது. நிரைத்தல்- தாமரைப்பூ, மாம்பூ, அசோகம்பூ, முல்லைப்பூ, நீலப்பூ என இவ்வரிசையில்
கோடல், அசோகு, மிளகு, கிளி குறிஞ்சிக்கருப்பொருள்கள். முள்முருக்கு,
கொன்றை, கானங்கோழி முல்லைக்கருப்பொருள்கள்.

     சுற்றெல்லா மலர்முல்லை ததைந்துபெருந் தூறுசெய அதன்கீழ்
எண்கு,  பற்றிநுழைந் துறங்கநடு வளர்கொன்றை மிசைக்கறி தாய்ப்
படருந் தோற்றம், உற்றரக்கன் வெள்ளிமலை எடுத்தநாள் வெரீஇத்
தழுவும் உமையா ளோடுங், கற்றைவார் சடைப்பெருமான் நின்றநிலை
காட்டுவதும் உண்டால் அங்கண். 130

     சுற்றிலும் மலரொடு கூடிய முல்லைக்கொடி செறிந்து பெரிய புதரைச்
செய்ய, அப்புதரின் கீழ் கரடி நுழைந்து துயில் கொள்ள, நடுவில் வளர்ந்த
கொன்றை மரத்தின்மேல் மிளகுக் கொடி தாவிப்படருங் காட்சி, இராவணன்
அணுகி வெள்ளி மலையை எடுத்த அந்நாளில் அஞ்சித் தழுவிய
உமாதேவியாரோடும் சிவபெருமானின்ற நிலையைக் காட்டுவதும்
அவ்விடத்துள்ளது.

     முல்லையும், கொன்றையும் முல்லைக்கருப்பொருள்கள், எப்பொருளையும்
சிவமாகக் காணும் காட்சியைக் குறிஞ்சி முல்லைகளின் மயக்கத்துள் வைத்துக்
காட்டினர்.

     தாம்பயிலும் வரைக்கிளைத்த செயலைமலர் கவர்மாரன்
தன்மேல்சீறி, ஆம்பலினங் கழனியிற்போய் அவன்சேமச்
சிலைக்கரும்பை அழித்துண் டார்க்கும், பூம்படுகர்ப் பகட்டினங்கள்
வெகுண்டெழுந்து மலைச்சாரற் புனிற்று வாழை, தேம்பயில்செந்
தினையனைத்தும் அழித்துழக்கி மேய்ந்துவக்குஞ் செவ்வித் தோர்பால்.

     யானைக்கூட்டங்களின் இருக்கையாகிய மலையிற்றோன்றிய அசோக
மலரைத் தனக்கு அம்பாகக் கொண்ட மன்மதன்மேல் வெகுண்டெழுந்து
மருதநிலத்திற்புக்கு அவன் கையிருப்பு வில்லாகிய கரும்பினை அழித்துப்
பிளிறி ஆரவாரிக்கும். மருத வயலின் எருமைக்கடாக்கள் வெகுண்டு போய்
மலைச்சாரலில் வளர்ந்த இளவாழையையும், இனிய செந்தினையையும் முற்றும்
அழித்துக் கலக்கி மேய்ந்து மகிழும் நிலைமையது ஓர்புறம்.

     குறிஞ்சி மருதங்களின் மயக்கம் இது.