460காஞ்சிப் புராணம்


சண்டாளனாவாய். கொல்லும் செயலையுடைய புலையன் யான்
அவ்வொழுக்கத்தின் மிக்கமையால், சிற்றிடைத் தாயைக் கொன்றோனே! நீ
என்னினும் கடையன் என்றறிதி!

இழிஞருக் கிழிஞன் ஆனாய் எனக்குநீ அடிமை எய்திக்
கழிபெரு மகிழ்ச்சி கூர்வாய் உனக்கியான் களைக ணாவேன்
மொழிவது சரதம் என்றான் அவ்வுரை முனிவன் கேளாப்
பழியுறு கதையில் தாக்கப் படும்அர வென்னப் பொங்கி.   31

     ‘பிறப்பான் இழிந்தவருள்ளும் வைத்துச் சிறப்பால் இழிந்தவனாயினை.
ஆகலின், எனக்கு நீ அடிமையாகி மிகப் பெருமகிழ்ச்சியிற்றிளைப்பாய்.
யானுனக்கு ஆதரவு தருவேன். இது மெய்யுரையே என்றருளினர். அதனை
முனிவரர் கேட்டுத் தண்டத்தால் தாக்கப்படும் பொல்லாங்கு மிகும் பாம்பு
போலச் சினந்து,

அண்ணலை மலர்க்கை ஓச்சி அடித்தனன் அமரர் தேறாப்
புண்ணிய முதல்வன் றானும் பொருக்கென முனிவன் றன்னைத்
திண்ணிய இரண்டு கையும் சிக்கென ஒருகை பற்றிக்
கண்ணறக் கொடிறு வீங்கப் புடைத்தனன் கமலக் கையால்.   32

     பெருமானை மலர்போலும் கையை வீசி அடித்தனர். தேவருந்
தெளியாத புண்ணிய முதல்வரும் விரைய முனிவர் தம்முடைய இரு
கைகளையும் இறுக ஒரு கையாற்பற்றி இரக்கமின்றிக் கன்னம் வீங்க மலர்க்
கையால் புடைத்தனர்.

முறைமுறை அதிரத் தாக்கி இருவரும் முனைந்து வெம்போர்
மிறையுறப் புரித லோடும் மெல்லியற் பிராட்டி நோக்கி
இறைவன்நின் னடிக்கீழ் அன்பின் இனியவன் வருந்தா வண்ணம்
பொறைகொளப் புடைத்தி என்றாள் புனிதனும் மெலிதின் தாக்க. 33

     மாறி மாறி நடுக்கமுறத் தாக்கி இருவரும் முற்பட்டுக் கொடிய போரை
வருத்தம் மிகப் புரியுங் காலை, அருள் வடிவாம் அம்மை கண்டு ‘இறைவனே!
நின்னடிக்கீழ் அன்பினால் இனியனாகிய அவன் வருந்தாதபடி பொறுக்கும்
அளவில் புடைத்தி’ என்றருளினர். புனிதனும் மெலிதாகக் தாக்க,

கடன்அறி முனிவன் வாகை தனதெனக் கருதி வாங்கும்
வடவரைச் சிலையோன் மார்பிற் சரங்கொடு வலிதின் தாக்கி
மிடலுறத் தெழித்தா னாக விண்ணவர்க் கரிய கோமான்
கெடலருஞ் சினமீக் கொண்டான் போல்மறைக் கிழவன் றன்னை  34

     கடப்பாட்டை உணர்ந்த பரசிராமர் வெற்றி தனதென மதித்து
மேருமலையை வில்லாக வளைக்கும் பிரானாரது மார்பிற் கரத்தால்
வன்மையொடும் தாக்கித் திண்ணிதாக உரப்பினராகத் தேவர்க்கரிய
பிரானாரும் தணியாத கோபம் பொங்கினவரைப் போல வேதியரை,