கன்றிடக் கரங்கள் காலிற் பிணிப்புறக் கட்டி நோன்தாள் ஒன்றினால் உருட்டிச் சேணின் உந்தினான் அவனை வேத வன்றிறல் ஞாளி சுற்றி வளைந்தன மருங்க நின்ற வென்றிகொள் மைந்தர் நோக்கி விலாவிறச் சிரித்திட் டாரால். 35 | கைகளினும், கால்களினும் வடுவுண்டாக இறுக்கிக்கட்டி வலிய தாளொன்றால் உருட்டிப்பின் நெடுந்தொலைவுறச் செல்லத் தூக்கி யெறிந்தனர். அப்பரசிராமரை மிக்க வலியுடைய வேதங்களாகிய நாய்கள் சுற்றிச் சூழ்ந்தன. பக்கத்திருந்த வெற்றி வாய்ந்த சிவகுமாரர்கள் கண்டு பெருகச் சிரித்தனர். விலா இறச் சிரித்தல்: ‘‘விலாஇறச் சிரித்திட்டேனே’’ (திருமுறை) திருவிளை யாட்டான் அண்ணல் சேவடிக் கமலத் துந்தப் பருவரும் உளத்த னாகிப் பசும்புதல் செறிய நீண்ட தருவடித் தலத்தின் ஆவி சாம்பினான் ஒத்து வீழ்ந்தான் மருமலர்க் கருமென் கூந்தல் இரேணுகை மைந்தன் அம்மா. 36 | திருவிளையாட்டாகப் பெருமான் திருவடி மலரால் தூக்கி எறியத் துன்புறும் மனத்தராகிப் பசிய புதர் செறிந்த நீண்ட மரத்தடியில் உயிரொடுங்கினவரைப் போல மணமலரை யணிந்த கரிய மெல்லிய கூந்தலையுடைய இரேணுகை மைந்தனார் வீழ்ந்தனர். அடங்கருந் துயரத் தாழும் அவ்வுழி வேரிக் கஞ்சத் தடம்புனல் குடைந்து வாசந் தாங்கிமென் மலர்ப்பூஞ் சோலை இடந்தொறும் வதிந்து வீழ்ந்தார் இன்னுயிர் தளிர்ப்பச் செல்லும் மடந்தைய ரென்ன மெல்லப் படர்ந்தது மலையத் தென்றல். 37 | பொதிய மலையின் இளங்காற்று, கரை கடந்த பெருந்துன்பத்துள் மூழ்கும் அந்நிலையில் தேனுடைய தாமரை ஓடையிற் படிந்து மணத்தைக் கொண்டு மெல்லிய மலர்களையுடைய பொலிவுள்ள சோலை தொறும் புகுந்து, விரும்பிய கணவர் தம் இனிய உயிர் தழைப்ப நெருங்கும் மகளிரை ஒப்ப ஏற்றுப் பையப்பையத் தவழ்ந்தது. தேம்பொதி இளங்கால் மேனி தைவரத் தெளிவு தோன்றி மேம்படும் அயர்ச்சி நீங்க விழித்துணை விடுத்து நோக்கித் தேம்பினான் இடும்பைக் கெல்லை யாயினான் திரியாச் சிந்தை ஏம்பலின் மறையோன் நெஞ்சத் திவைஇவை எண்ண லுற்றான். 38 | இனிமை நிறைந்த இளங்காற்று உடம்பை வருடத்தெளிவுபிறந்து மிக்க தளர்ச்சி ஒழியக் கண்களைத் திறந்து பார்த்துத் துன்பத்திற்குக் கொள்கலமாய் மெலிந்தான். பிறழாத சிந்தையால் வருந்துதல் இல்லாத மறை முனிவன் தொடர்ச்சியாகப் பின் வருமாறு எண்ணலுற்றனன். |