பவன் -அழிவில்லாதவன்; உலகத் தோற்றத்திற்கு நிலைக்களனாகவுள்ள காரணமானவன், இன்பஞ் செய்தலின் சங்கரன் எம்பிரான் இன்பம் ஆக்கலின் சம்பு இடும்பைநோய் என்ப தோட்டும் இயல்பின் உருத்திரன் என்ப ரால்அவை என்னிடைப் பொய்த்தவோ. 44 | எமது பெருமான் உயிர்களுக்குக் கின்பத்தைச் செய்தலின் சங்கரன்; இன்பத்தை உண்டாக்குதலின் சம்பு; துன்பத்திற்குக் காரணமான நோயை ஓட்டும் இயல்பினால் உருத்திரன் என்று கூறுவர் அவை முற்றும் என் கண் பொய்பட்டனவோ? ‘‘நண்ணினர்க்கு நல்லன், சலமிலன் பேர் சங்கரன்’’ (திருவருட்பயன்.) பேதை நீரிற் பெரும்பிழை செய்துளேன் ஆத லால்இவ் வருந்துயர் எய்தினேன் பூத நாதனைப் போதப் பழிச்சிஎன் ஏதந் தீர்வல் எனத்துணிந் தேத்துவான். 45 | அறிவின்மையாற் பெருந்தவறு புரிந்துளேன்; ஆதலின், அதன் பயனாகிய பொறுத்தற்கரிய துன்பத்தை அடைந்தேன். இனி, ஆன்ம நாயகனைப் பெரிதும் துதிசெய்து என்னுடைய துன்பத்தைப் போக்கிக் கொள்வேன்‘ என உறுதி கொண்டு துதிப்பான். மேற்படி வேறு மூவா தபடைப் புமுதற் றொழில்ஐந் தோவா மைஇயற் றிஉயிர்த் தொகைகள் தாவா மலமூன் றும் அறத் தருவாய் ஆவா அடியேன் உன்அடைக் கலமே. 46 | ‘கெடாத சிருட்டி முதலான தொழில்கள் ஐந்தனையும் ஒழியாது செய்து கெடாத மல மூன்றும் நீங்க அருள் செய்யாய். ஆவா! அடியேன் உன் அடைக்கலப் பொருள். ஓவாமை இயற்றல் ‘‘போக்கு வரவு புரிய” (சிவஞா. சூ. 2) என்னும் மூலமும், ‘இறத்தல் பிறத்தல்களைப்புரியும் வண்ணம்’ என்னும் ஆசிரியர் உரையும், புரிதல்-எப்பொழுதும், மேற்கோடல் என்னும் விசேடவுரையும் நினைவு கூர்க. மலம் கெடாமையும், மலவலி கெடுதலும் கொள்க. ஆவா, இரக்கச் சொல், படியா தியபற் பலதத் துவமாய்க் குடிலாந் தம்அகன் றகுரூஉச் சுடரே முடியா முடிவே முதலா முதலே அடிகேள் அடியேன் உன்அடைக் கலமே. 47 | |