|      ‘மண்முதலாம் பலப்பல தத்துவமாகியும், நாதாந்தத்தையும் கடந்த    நிறமுடைய ஒளியே’ மாசங்காரத்தைச் செய்வோனே! அவாந்தர
 முதல்வர்களுக்கு முதன்மை தருவோனே! சுவாமிகளே! அடியேன் உன்
 அடைக்கலப் பொருள் உலகை முடித்தலின் ‘முடிவே’ என்றனர்.
      அந்தத்தைச் செய்யும் முதல்வனை ‘அந்தம்’ என்றாற்போல.	 		| உமையாள் ஒருபால் உடையாய் முறையோ இமையா சலவில் இறைவா முறையோ
 அமையா விடமுண் டமைவாய் முறையோ
 தமைநா டினர்தந் தலைவா முறையோ.           48
 |       ‘உமையம்மையை ஒரு பங்கிலுடையோய் முறையோ! மேரு மலையை    வில்லாக உடைய இறைவனே முறையோ! பிறருண்ணற் காகாத விடத்தை
 உண்டும் அமைந்தவனே முறையோ! தம்மை விரும்பினரை அடிமை
 கொண்டருளுந் தலைவனே முறையோ!’
      மேருவின் நிகழ்ச்சியை இமையத்திற்கு ஏற்றிக் கூறுதல் வழக்கு.    ‘‘இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்’’ (கலி. 38:1.)
 		| கச்சிப் பதிஎய் துபுநின் கழல்கள் நச்சிப் பணிசீர் நரர்வா னவருள்
 இச்சித் தபெறா தவரே எனினும்
 பொச்சத் தொடுபோ யினர்தம் உளரோ.         49
 |       ‘காஞ்சியை எய்தி நின்னுடைய திருவடிகளை விரும்பிப் பணிந்த    மக்களுள்ளும் தேவருள்ளும் விரும்பிய வரங்களைப் பெறாது போந்தார்
 உளர் என்னினும், குற்றத்தொடும் மீண்டவர் உளரோ? இல்லை.’
      நலம்பெறாமையொடும் இழிசனனால் இழிதகவடைந்தேன் என்பது     குறிப்பு. எனினும் என்பது பெறாது போயினார் இலர் என்னும் பொருள்
 தந்தது.
 		| உளையுஞ் சிறியேன் இடர்உன் னலையோ களைகண் பிறகண் டிலன்எம் பெருமான்
 இளையா தினியே னும்இரங் கிடுவாய்
 முளைவான் மதிவேய்ந் தமுடிச் சடையோய்.     50
 |       ‘வானில் முளைத்த பிறையைச் சூடிய சடை முடியோய்! வருந்துஞ்    சிறியேன் துயரத்தைத் திருவுள்ளத்துக் கொண்டிலையோ! வேறோர்
 பற்றுக்கோடுடையை னல்லேன் பெருமானே! இந்நிலையிலேனும் மேலும்,
 மெலியாதபடி இரங்கி அருள் பாலிப்பாய்!’
 |