பெருமான் காட்சி கொடுத்தருளல் கலி நிலைத்துறை என்றின்ன பழிச்சி இரந்தயர் கின்ற மேருக் குன்றன்ன தவத்தவன் அன்பின் அளாய கொள்கை துன்றுந்துதி வார்த்தை செவித்துணை ஏற்று நின்று நன்றும்பெரி துள்ளம் மகிழ்ந்தருள் நங்கை பாகன். 51 | என்றின்ன துதி செய்து குறையிரந்து தளர்கின்ற மேரு மலையை யொக்கும் தவத்தினனாகிய பரசிராமனுடைய அன்புகலந்தவேண்டுகோள் அமைந்த துதி மொழியை அம்மை அப்பர் மிகப்பெரிதும் திருவுள்ளம் மகிழ் கூர்ந்து ஏற்று, அன்னான்எதிர் அவ்வுரு தன்உரு வாகத் தோற்றித் தன்னேர்வடி வங்கொள் திருந்திழைத் தைய லோடு மின்னார்வடி வேற்படை விண்ணவன் வேழப் புத்தேள் என்னாவரு மைந்த ரொடுந்திருக் காட்சி ஈந்தான். 52 | அப்பரசிராமன் எதிர் அப்புலை வடிவு மாறிப் பழைய திருவுருக் காட்டித் தம்மையொப்ப வடிவம் மாற்றிய, தொழிலாற்றிருந்திய அணிகளைப் பூண்டதையலாரொடும் மின்னொளி மேவும் வடிவேற்படையினையுடைய முருகப்பெருமானார், விநாயகப் பெருமானார் என்று வருந் திருக் குமாரரொடும் திருக்காட்சி தந்தனர். கண்டான் முனிவன் கழிகாதல் நடுக்கம் அச்சங் கொண்டான் எழுந்தான் துனிகூரும் இடுக்கண் முற்றும் விண்டான் உவகைக் கடல்மூழ்கி மருட்கை மேவித் தண்டாத அன்பிற் பெருமான் இரு தாள்ப ணிந்தான். 53 | முனிவன் கண்டனன்; பேரன்பும் பேரச்சமும் கொண்டனன்; எழுந்தனன்; துன்பம் மிகுந்த இடர் முற்றும் நீங்கினன்; மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி வியப்புற்று அமையாத அன்பொடும் பெருமானார் திருவடிகளைப் பணிந்தனன். பணிந்தான் றனைஒல்லை எடுத்தணைத் துப்ப னிக்கோ டணிந்தான் அருள் கூர்ந்துநம் பக்கம்இருத்தும் அன்பின் துணிந்தாய்உளம் வேட்டது சொல்லுதி என்ன உள்ளந் தணிந்தார்வம் உறக்கரம் அஞ்சலி சார்த்தி நின்று 54 | வீழ்ந்து வணங்கிய பரசிராமனைப் பிறைச்சந்திரனை அணிந்த பிரானார் விரைந்து எடுத்துத் தழீஇ அருள் மிகுந்து ‘நம்மிடத்து வைத்த பேரன்பினால் துணிவுடையோய்! மனம் விரும்பியவற்றை வேண்டுதி’ என்றருள, உள்ளம் அமைதியுற்று விருப்பம் மிகக் கைகுவித்து நின்று, ‘பனித்துண்டம்’-பிறைச்சந்திரன் (திருக்கோ-132) |