இரேணுகேச்சரப் படலம் கலி விருத்தம் கொங்கவிழ் நறுமலர்க் கொன்றை வேணியன் தங்கிய பரசிரா மேசஞ் சாற்றினாம் அங்கதன் தென்புடை அலைந திக்கரை பொங்கர்சூழ் இரேணுகேச் சரத்தைப் போற்றுவாம். 1 | தேனுடன் மணம் உயிர்க்கும் நறிய கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினையுடைய பெருமானார் எழுந்தருளியுள்ள பரசிராமேச வரலாற்றினைக் கூறினோம். இனி அத்தலத்திற்குத் தெற்கே பாலியாற்றின் கரையில் சோலை சூழ்ந்த இரேணு கேச்சரத்தைப் போற்றிக் கூறுவோம். இரேணுகை மனங்கலங்கல் கரேணுக திப்பரை கணவன் அன்பர்பா தரேணுக வசம்உடல் தாங்கி நேர்ந்தமன் னரேணுக வெல்பர சிராமன் நம்புதாய் இரேணுகை என்பவள் அழகின் எல்லையாள். 2 | பெண்யானையின் நடையினை ஒக்கும் நடையினையுடைய உமையம்மையார்க்குக் கணவர்தம் மெய் யன்பருடைய திருவடித் துகளைக் கவசமாக மெய்யிற்றாங்கி எதிர்ந்த மன்னவர் வலி அழிய வென்ற பரசிராமன் விரும்புகின்ற அவனுக்குத் தாயாகிய இரேணுகை எனப்படுவாள் அழகின் வரையறையில் நின்றவள். விச்சைதேர் பெற்றிய வரும வேந்தனார் மெச்சிய வரத்தினில் தோன்றும் மெல்லியல் அச்சம தக்கினி மனைவி யாயினாள் பொச்சமில் கற்பினிற் பொலியும் மேன்மையாள். 3 | கல்வியை ஆராய்ந்துணரும் இயல்பினையுடைய வருமவேந்தனார் போற்றிய வரத்தின் பயனாக வந்த மெல்லிய இயல்பினையுடையாள் சமதக்கினி முனிவர்க்கு வாழ்க்கைத் துணைவியாய் மெய்க்கற்பினின் விளங்கும் மேன்மையள் ஆயினள். மனைஅறக் கிழமையின் ஒழுகு மாணிழை நனைமலர்க் குழலிஓர் ஞான்று பொய்கையில் கனைதிரைத் தடம்புனல் கவரப் போந்துழி வினைவழிக் கண்டனன் காத்த வீரியன். 4 | |