இல்லற தருமத்தின் வழுவாதொழுகும் மாட்சிமையையும் அணி கலனையும் பூண்ட தேன் பொருந்திய மலரணிந்த கூந்தலாள், ஒலிக்கின்ற திரைகளையுடைய பெரிய நீர்நிலையினின்றும் நீர் கொண்டுவர ஓர்கால் செல்லுகையில் தீவினை வயத்தனாய்க் காத்த வீரியன் அவளைக் கண்ணுற்றனன். காண்டலும் காமவேள் கணைக்கி லக்கமாய் ஆண்டகை அவள்எதிர் அணுகி நின்றனன் மாண்டதன் புறவடி நோக்கு மாதராள் ஈண்டுபே ரழகுடை இறையை நோக்கலள். 5 | ஆண்டகை கண்ட அளவிலே மன்மதன் மலரம்புகளுக் கிலக்காகி அவளுக்கு எதிரில் நெருங்கிச் சென்று நின்றனன். மாட்சிமைப்பட்ட தன் பாதங்களையே நோக்கி நடக்கும் இரேணுகை ஆகலின், செறிந்த பேரழகுடைய அவ்வரசனைக் கண்டிலள். குனிந்த தலையை நிமிர்ந்து நோக்காதவள் என்பது குறிப்பு. பிறன் மனை நோக்காத பேராண்மையில்லாதவன் ஆதலின், ஆண்டகை’ என்பதிகழ்ச்சி. இனிச்செயல் எவன்என எண்ணி வேந்தர்கோன் புனற்குமேல் விசும்பிடைப் பொலிந்து தோன்றினான் பனித்தநீர்ப் பரப்பின் அப் பதகன் நீழலை முனிக்குரி மரபினாள் முந்தி நோக்கினாள். 6 | இனிச் செய்யத் தக்கது யாதென நினைந்து அரசர்க்கரசன் நீர் நிலைக்குமேல் வானின்கண் பொலிவுற்றுக் காண நின்றான். குளிர்ந்த நீர் மேல் அத்தூர்த்தனின் சாயலைச் சமதக்கினி முனிவர்க்குத் தன்நலத்தை உரிமைப்படுத்திய நல்ல வழக்கினன் கூர்ந்து நோக்கினாள். முந்தி-முனைத்து; கருத்தொருமித்து. காமனுஞ் சிறிதுதன் மதுகை காட்டினான் பூமலர்க் கூந்தலாள் உளத்தைப் பொள்ளென வாய்மையின் தன்வழிப் படுத்து மாண்குடத் தாமுகந் தெடுத்துமீண் டகத்தை நண்ணினாள். 7 | மன்மதனும் அந்நிலையே சிறிது தன் வலிமையைப் புலப்படுத்தினான். அழகிய மலரணிந்த கூந்தலாள் தன் உள்ளத்தை வாய்மையினால் விரையத் தன் வழிப்படுத்தி (மீட்டு) மாட்சிமையுடைய குடத்தில் நீரை முகந்து கொண்டு மீண்டு தவச்சாலையை நெருங்கினாள். ‘‘சென்ற இடத்தாற செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு” (திருக்.) |