திருநாட்டுப்படலம் 47


     (செயலை) அசோகு, யானை, மலைவாழை, செந்தினை குறிஞ்சிக்
கருப்பொருள்கள். கடாக்களும், கரும்பும் மருதநிலத்தன. மலையுறை பகடு
வயல் வளங்களையும் வயலுறை பகடு மலை வளங்களையும் அழித்தல்.

     வரைக்குறக்கன் னியர்புனத்துக் குருகோட்டும் கவண்மணிக்கல்
மருதத் தெண்ணீர்த், திரைக்கயத்துத் திடர்செய்ய அந்நிலத்துச்
சிறுமகார் சினமீக்கொண்டு, விரைத்தகுழற் பேதையர்கள் வண்டலாட்
டயர்துறையின் மேவிப் பந்தும், நிரைக்கழங்கும் அவரலறப்
பறித்தெறிந்து நீர்ச்சுனையைத் தூர்ப்பார் அங்கண்.      132

     குறச்சிறுமியர், புனத்தில் தினைக்கதிரைக் கவரவரும் பறவைகளை
ஓட்டக் கவணில் வைத்தெறிந்த மணிகளாகிய கற்கள், மருதநிலத்து நீர்
நிலைகளைத் தூர்த்து மேடு செய்ய, அவ்வயற் சிறுமியர்கள் சினமிக்குச்
சென்று மணந்தங்கிய கூந்தலையுடைய அக்குறச் சிறுமியர்
விளையாட்டிடங்களை அடைந்து பந்தையும், கழற்சிக்காய்களையும் பறித்து
அவர் அரற்றச் சுனையைத் தூர்ப்பார். குறிஞ்சி மருதங்களின் மயக்கம் இது.
கன்னிப் பருவத்துத் தினைப்புனங்காவல் செய்வர் ஆகலின் கன்னியர்
என்றனர். கவண்-கிளிகடி கருவி.

     தாமும்ஒரு பயப்படார் பயப்படுவார் தம்மையுந்தம் போற்செய்
வார்போல், காமர்அளி நுகராமல் கழிப்பூமேல் அடுக்கலுறுங் கணிதேன்
ஊற்றும், ஆமிதனை அறிந்துவெகுண் டெழுந்தென்ன அணிவேங்கைக்
குடுமி தன்னை, நாமநீள் கடல்பவளக் கரநீட்டிப் பற்றியிடு நலமும்
ஓர்பால்.                                         133

     தாமும் அறஞ் செய்யாராய், செய்வோரையும் தம்மைப்போல ஆக்கும்
உலோபர் போல, அழகிய வண்டு நுகராதவாறு உப்பங்கழியிலுள்ள மலர்களில்
மலையிலுள்ள வேங்கை மலர்கள் தேனைச் சொரிந்து கெடுக்கும். அதனைப்
பொறாது அச்சம் செய்யும் கடல், பவளமாகிய கரத்தை நீட்டி அவ்
வேங்கையின் குடுமி (உச்சி)யைப் பற்றிடும் ஒருபுறம்.

     இது குறிஞ்சி நெய்தல்களின் மயக்கம். நாமம்-அச்சம்.

     அலைக்காகம் மலைச்சாரற் பலாச்சுளையைக் கவ்வியெழுந்
தரக்கர் கோமான், சிலைத்தாச ரதிமனையைக் கொண்டகன்றா
லெனவங்கஞ் சேரும் அந்நாள், நிலைப்பான மதில்இலங்கை
மிசைத்தாவும் அனுமனைப்போல் நீள்வால் மந்தி, மலைப்பால்நின்
றலைத்தோணி பாய்ந்துழக்கி மீண்டெய்தும் வாழ்வும் அங்கண். 134

     நெய்தல்நில நீர்க் காக்கை மலையிடத்துப் பலாவின் சுளையை
வாயிற்கவ்விக் கொண்டு, இராவணன் இராமன் மனைவியைக் கைப்பற்றி
மீண்டாற்போல மீண்டு மரக்கலமேற் சேரும் அக்காலத்து நிலையுடைய
மதில் சூழ்ந்த இலங்கைமேல் தாவும் அனுமனைப் போல நீண்ட
வாலையுடைய குரங்கு மலையினின்றும் மரக்கலத்துட் பாய்ந்து கலக்கி
மீண்டடையும் நிகழ்ச்சியும் அவ்விடத்துள்ளது. இதுவும் அம்மயக்கே.