பரசிராமன் தாயைக் கொன்றெழுப்புதல் எதிருறப் போந்துழி முனிவர் ஏறனான் மதிமுக மனைவிபா ணித்த வாற்றினைக் கதுமென அறிவினிற் கருதித் தேர்ந்தனன் முதுநெறி கோடிய மூர்க்கன் செய்கையே. 8 | தவச்சாலையின் எதிராக வருகையில் முனிவர்தலைவர் மதியை ஒக்கும் முகத்தையுடைய தம்மனைவி காலந் தாழ்த்துவரற்குரிய காரணத்தையும், அறிவுசெறிவினின்றும் பிறழ்ந்த கொடியோன் செய்கையையும் அறிவினால் விரைய எண்ணித் துணிந்தனர். முதுநெறி-பேரறிவு நெறி. மூர்க்கன், கொண்ட பிழையை விடாமையின் என்க. (சார்ந்தாசயப்படலம் 10ஆம் செய்யுள்) வடவையின் வெகுண்டுதன் மகனை நோக்கினான் படர்புகழ் இராமநிற் பயந்த பூங்குழல் கடல்புரை எழில்நலங் காமுற் றண்மினான் விடமெனத் தோன்றிய காத்த வீரியன். 9 | வடவைத் தீயை ஒப்பச் சினங்கொண்டு தன் மகனாகிய பரசிராமனை நோக்கித் திசையெல்லாம் பரவு புகழுடைய இராம! நின்னை ஈன்ற பூவையணிந்த கூந்தலாளது கடல் போலும் அழகினால் ஆகும் இன்பத்தை விரும்பிக் கொடிய நஞ்சினைப் போலத் தோன்றிய காத்த வீரியன் அவளை நெருங்கினான். ஆங்கவன் இளமையும் அரசும் ஆற்றலும் நீங்கரு மடமையும் நிறைந்த நீர்மையால் ஈங்கிவட் பற்றுவன் எம்மை எண்ணலான் ஓங்குயர் குணத்தினோய் உரைப்பக் கேட்டியால் 10 | அவன் இளமையும், அரசும், வலிமையும், நீங்குதற்கரிய அறியாமையும் ஆகிய இந்நான்கும் நிரம்பிய நிலைமையால் தன்னையே மதித்து எம்முடைய நிலைமையைச் சிறிதும் மதியானாய் இப்பொழுதே இவளை வலிதிற் கொள்வன். ஆதலின், மிக்குயர்ந்த நற்குணத்தினையுடையோய்! அறிவு கொளுத்தக் கொள்ளான் என்பார் நீங்கரு மடமையுடன் நிறைந்த நீர்மை எனவும், ஒவ்வொன்றே கேட்டிற்கெல்லாம் உறுதுணையாகி நிற்கும், இவ்வகை நான்கும் கூடி ஒருவன்பால் இருந்த எனவும் கூறினார். என்னுடை ஆணையின் நிற்றி யேல்இவள் சென்னியைத் தடிமதி விரைந்து செல்கெனத் தன்னுடைக் குருமொழி சிரத்தில் தாங்கினான் அன்னையைக் கொடுபுறத் தணுகி னானரோ. 11 | |