‘‘என்னுடைய ஏவல் வழி நிற்பாயாயின், இவளுடைய தலையை வெட்டி எறிதி. விரைந்து செய்க’’ என்று கூறத் தன்னுடைய குருவின் திருவாக்கைச் சிரமேற்கொண்டு தாயை உடன்கொண்டு தவச்சாலைக்குப் புறம்பே வந்தனன். அல்லலே பெண்ணெனப் பிறத்தல் ஆங்கதின் அல்லலே இளமையிற் சிறத்தல் ஆங்கதின் அல்லலே கட்டழ குடைமை ஆங்கதின் அல்லலே இரவலர் சார்பின் ஆகுதல். 12 | பெண் பிறப்புப் பெருந்துன்பத்திற்குக் காரணம் ஆம்; அதனின் மிக்கது நல்லிளமை; அதனின் மிக்கது பேரழகுடைமை; அதனின் மிக்கது வறியவர்க்கு உரிய பொருளாதல். துன்பங்களுக் கேதுவாவனவற்றைத் துன்பங்களென்றுபசரித்தார். அரங்குறை படுத்தவாள் அங்கை ஏந்திநல் உரங்குறை படுத்திடா உறுவன் அன்னைதன் சிரங்குறை படுத்துமீண் டெய்தித் தேசிகன் வரங்குறை படுத்திட அடிவ ணங்கலும். 13 | நல்லறிவு நிரம்பிய முனிவனாகிய பரசிராமன் அரத்தினாற் கூரிதாக்கிய வாளை அகங்கையிற் கொண்டு தாயின் தலையைக் கொய்து மீண்டு வந்து தேசிகனுடைய மேன்மை பொருந்தி திருவடிகளை வணங்கிய அளவிலே, வேண்டிய வரம் எனினும் ஆம். துன்பமுற் றருந்தவன் இரங்கிச் சொல்லுவான் வன்பெரு மன்னவன் மகட்கு மைந்தன்நீ என்பதும் என்னிடத் தன்பும் இன்றியான் நின்புடைக் கண்டனன் அறிவின் நீடியோய். 14 | சமதக்கினி முனிவர் வருத்தம் மிக்கு அறிவின் மிக்கோனே! நீ பெருவலியுடைய வரும் வேந்தன் மகளாகிய இரேணுகை மகன் என்பதனையும் என்னிடத் தன்புடைமையையும் யான் நின்னிடத்து ஒருங்கு கண்டேன். கொலைக்கு அஞ்சாமையால் அரச தருமமும், தந்தை சொற் கடவாமையால் அன்பும் கண்டனன் என்றனர். என்னுரை நிறுவினை யேனுந் தாய்கொலை நன்மையன் றுலகமும் பழிந விற்றும்என் றன்னுரைப் படிஅவண் ஏகித் தாழ்குழல் சென்னியைப் பொருந்துறச் சேர்த்தெ ழுப்பியே. 15 | என்னுடைய கட்டளையை நிறைவு செய்தனை, ஆயினும், தாயைக் கொலை செய்தல் அறமன்று. உலகோரும் என்றும் பழிப்பர். இப்பொழுதும் என்னுடைய மொழிவழியே ஆங்குச் சென்று தாழ்ந்த கூந்தலாள் தலையைப் பொருந்தும்படி சேர்த்தெழுப்பியே. |