பழிவருவன சில; பாவம் வருவன சில; இரண்டும் வருவன சில எனச் செயல்கள் மூவகைய ஆம். ‘‘புகழொடு, நன்றி பயவா வினை’’ (திருக். 652) என்புழிக்காண்க. பொன்னடி வணங்கிஅஞ் சலித்துப் போற்றிஎன் அன்னைநின் கருத்தினுக் கடுத்த வாறுசெல் கென்னஅங் ககற்றிஈண் டெய்து வாயெனத் தன்னுடைத் திருமகற் கியம்பித் தாபதன். 16 | ‘‘பொன்னை ஒக்கும் அடிகளில் வீழ்ந்து வணங்கிக் கரங்கூப்பித் துதி செய்து ‘என் அன்னையே! நின்மனம் செல்வழிச் செல்க’ என்று அங்கிருந்து அகல்வித்து இங்கெய்துவாயாக” எனத் தன்னுடைய நன்மகனுக்கு எடுத்தியையக் கூறித் தவமுனிவர், உன் கருத்தாகப் போற்றுதலும், என் கருத்தாக அகற்றுதலும் செய் என்றனர் முனிவர், வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்குந் தீவினை வெகுளியே குணந்தவம் விரதம் மாய்க்குமால் வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால் வெகுளியிற் கொடும்பகை வேறொன் றில்லையால். 17 | கோபமே உயிர்களுக் கெல்லாம் பாபமாகிய பைங்கூழை விளைவிக்கும் வித்தாம். மேலும், கோபமே நற்குணம், தவம், நோன்பு முதலிய புண்ணியச் செயல்களை அழிக்கும் கருவியாம்; கோபமே அறிவினை அழிக்கும் மயக்கப் பொருளாம். கொடுமை மிக்க கோபத்தினும் கொடிய பகை ஒருவற்குப் பிறிதொன்றும் இல்லை (அதுவே என்க) கோபத்தின் கொடுமையை விளங்குவான் வேண்டி அதனைப் பன்முறை கூறினார். சமதக்கினியைக் காத்தவீரியன் கொலைசெய்தல் என்றிவை தன்மனத் தெண்ணி வெஞ்சினம் ஒன்றறத் துறந்தினி துறையுங் காலைஅப் புன்றொழில் வேந்தன்அஃ துணர்ந்து பொள்ளென வென்றிமா தவன்சிரந் துணித்து மீண்டனன் 18 | என்றிவ்வாறு சமதக்கினி முனிவர் தம்முள்ளத்தில் எண்ணிக் கொடிய கோபத்தை வேரொடும் அகழ்ந்துபோக்கி முன்போல் இயல்பின் வீற்றிருக்கும் காலை, இழி செயலையுடைய காத்த வீரியன் ஆங்கு நிகழ்ந்த தறிந்து வெற்றி வாய்த்த பெருந்தவ முனிவரது தலையை விரைய வெட்டி வீழ்த்தி அகன்றனன். இரேணுகை தெய்வமாதல் மதலையின் ஆவிபெற் றகன்ற மாணிழை இதமுறு கணவனை இழந்த துன்பினால் நுதலரு மகன்வரப் பேறு நோக்கிஅப் புதல்வன திசைவுபெற் றாங்குப் போயினாள். 19 | |