474காஞ்சிப் புராணம்


கைவிட்டு உண்மையைக் கூறாதவர் உளரோ? குற்றமற்ற உயிர்கள்
அனைத்தினுக்கும் நீ தாதையும் இமயத்தையலார் தாயும் ஆகலின்
தாய்க்கொளித்த சூலுண்டோ? கூறுகேன்.

கலி நிலைத்துறை

அடிய னேன்பல திறத்தினும் பரிபவம் அடைந்தேன்
பொடிகொள் மேனியாய் இங்குனைப் பூசனை புரியும்
படியி லாப்பெரு வாழ்வுபெற் றெய்தினேன் படியோர்
கடித ராதருள் வைத்தெனைக் காப்பதுன் கடனால்.   24

     ‘‘திருவெண்ணீறு சண்ணித்த திருமேனியனே! அடியேன் பல்
வகையாலும் இழி நிலையையும் அவமதிப்பையும் எய்தி வருந்தினேன்.
இத்தலத்தில் உன்னைப் பூசனை புரியும் ஒப்பில்லாத பெருவாழ்வினைப்
பெற்றேன். உலகோர் இகழ்ந்து விலக்காதவாறு திருவருள் செய்து தாழ்ந்த
அடியேனைக் காத்தல் உனக்குக் கடப்பாடாம்.’’

புகழும் ஆக்கமும் முத்தியும் உயிர்க்கருள் புராணன்
இகழும் இன்னலுந் தவிர்ப்பவன் இருள்மலக் கிழங்கை
அகழும் நாயகன் யாங்கணும் நிறைந்தவன் அடியார்
திகழும் அன்பினுக் கெளியவன் சிவபிரான் என்றும்.  25

     ‘புகழையும், செல்வத்தையும், முத்தியையும் உயிர்க்கருளும்
பழையோனும், இகழ்ச்சியையும், துன்பத்தையும், நீக்குவோனும், ஆணவ
மலத்தை வேரொடும் அகழும் தலைவனும், யாண்டும் நீக்கமற நிறைந்தவனும்,
அடியவர்தம் பேரன்பினுக்கெளிவரும் பிரானும் சிவபிரானே என்றும்,

கொழுநன் யாரினும் இனியவன் என்றுகூ றுவர்அக்
கொழுநன் இவ்வுடற் குரியவன் குறிக்கில்ஆ ருயிர்க்குக்
கொழுநன் தந்தைதாய் செல்வமும் ஏனவுங் கொன்றைக்
கொழுந னைத்தொடைக் குளிர்சடைச் சிவபிரான் என்றும்.  26

     ‘ஒருத்திக்குக் கணவன் உறவினர் யாவரினும் இனியனாவன் என்று
கூறுவர் அறிந்தார்; எடுத்தியம்பில் அவன் இவ்வுடம்பிற்கே நாயகன் ஆவன்.
அரிய உயிர்க்குக் கணவனும், தந்தையும், தாயும், செல்வமும், பிறவும்
செழித்த தேனையுடைய கொன்றை மலர் மாலையைச் சூடிய கங்கையால்
ஈரிய சடையுடைய சிவபெருமானே ஆவன் என்றும்,

இனைய வாயின பெருமைகள் எடுத்தெடுத் தெனக்கு
வினையின் நீக்கும்என்கணவன்நாள்தொறும் விரித்துரைக்கும்
அனைய நிற்றொழு துய்ந்துளார் அளவிலார் அடியேன்
தனைய னுக்கும்ஈண் டரும்பெறற் பேறுதந் தளித்தாய்.     27