‘‘இத்தன்மைய ஆகிய சிறப்புக்களைப் பொதுத் தன்மையைப் போக்கி எனக்கு இருவினையினின்றும் நீக்கி யாட்கொள்ளும் என் நாயகனார் நாளும் நாளும் விரித்தறிவுறுப்பர். அத்தன்மை வாய்ந்த நின்னை வணங்கி வாழ்வு பெற்றவர் அளவிலர் ஆவர். என்மகன் பரசிராமனுக்கும் இச்சூழலில் பெறற்கு எளிதல்லாப் பேறுகளைத் தந்தருளினை. ஐய னேஅடி யேனையுங் காத்தருள் அசலத் தைய லேசகம் முழுவதும் அளித்திடுந் தாயே உய்யு மாறெனைக் காத்தருள் உமைச்சரண் அடைந்தேன் பொய்யர் சிந்தையின் அகப்படீர் போற்றிஎன் றிரந்தாள். 28 | ‘‘தலைவனே! ஒன்றுக்கும் போதாத நாயேனையும் காத்தருளும் இமயப் புதல்வியே! உலகங்கள் யாவற்றையும் கருணையொடும் காக்கும் தாயே! பிழைக்கும் வகையுற என்னைக் காத்தருள்க! உம்மைப் புகலடைந்தேன். புலன்வழி ஒழுகும் உணர்ச்சியைக் கடந்தவர்களே! போற்றி:” என்று வேண்டினள். அம்மை அப்பராய் அகிலமும் புரந்தருள் கருணைச் செம்ம லார்நகை முகிழ்த்தெழத் திருவுளம் மகிழ்ந்தே எம்மை வேட்டவை விளம்புதி இமயம்ஈன் றளித்த கொம்மை மென்முலை உனக்கவை தருமெனக் கூற 29 | அனைத்துயிர்க்கும் அன்னையும் அத்தனும் ஆகிப் பாதுகாத்தருளும் அருளுடைய அண்ணலார் புன்னகை பூத்துத் தவழத் திருவுள்ளம் மகிழ்ந்து ‘எம்மிடத்து விரும்பிய வரங்களைக் கூறுவாய் இமயவல்லி உனக்கு அவற்றை வழங்கும்’ என வாய் மலர, அன்பின் ஏத்திநின் றிரேணுகை அணியிழை வேண்டும் என்ப ணிக்கினி யாய்நனி விழுத்தக வெய்தித் துன்பம் எண்ணில பட்டயான் தூயநின் அருளான் மன்ப தைக்கெலாம் வழிபடு தெய்வமாய் வயங்கி. 30 | அன்புடன் துதித்து நின்றிரேணுகை என்னும் அணியிழையாள் வேண்டுவள்: ‘என்றொண்டினையும் இனியவாக ஏற்றோனே! பெரிதும் மேம்பாடுற்றுப் பின்னர்த்துன்பமும் எண்ணிலாதன எய்திய யான் நின் அறக்கருணையால் மக்கட்கெல்லாம் வழிபடற்குரிய தெய்வமாய் விளங்கி, போகம் அவ்வவர் வேண்டிய புணர்ப்பெலாங் கண்கூ டாக நல்குபே றெனக்கருள் இவ்விலிங் கத்தின் ஏக நாயக இனிதமர்ந் திருமையும் எவர்க்கும் நீக னிந்தருள் புரிமதி எனநிகழ்த் துதலும். 31 | ‘அவரவர் விரும்பிய போக நுகர்ச்சிகள் யாவும் கைமேற் பலனாக வழங்கும் ஆற்றலை எனக்கருள் செய்தி, தனி முதல்வ! இச்சிவலிங்கத்தில் இனிதிருந்து போகமோட்சங்களை யாவர்க்கும் நீ கருணை கூர்ந்தருள் செய்’ எனக் கூறலும், |