476காஞ்சிப் புராணம்


அண்ண லார்உமை கூற்றினால் அவட்கவை உதவி
மண்ணின் மேற்கலி யுகத்துறு மானிடர் கருதும்
எண்ணம் எண்ணியாங் கியாவையும் இழிகுலத் துள்ளார்
நண்ணி வேட்டன சாலமிக் களிப்பவும் நல்கி         32

     தலைவர் உமையம்மையார் பங்கினால் இரேணுகைக்கு அவற்றை
உதவி மண்ணிடத்திற் கலியுகத்தில் மக்கள் எண்ணும் எண்ணத்துள்
எண்ணியவாறே எவற்றையும் இழிகுலத்துள்ளவர் அடுத்து வேண்டிய
நிரம்பவும் வழங்க அருள் செய்து.

கொம்ப னாள்பெறத் தெய்வதத் திருஉருக் கொடுத்துக்
கம்ப னார்மலை மகளொடுங் கரந்தருள் செய்தார்
வம்பு வார்குழல் இரேணுகை மடந்தைஅப் பொழுதே
அம்பு விக்கொரு தெய்வதம் ஆயினள் அம்மா.      33

     பூங்கொம்பனையவள் பெறத் தெய்வவடிவங் கொடுத்துத் திருவே
கம்பனார் அம்மையுடன் திருவுருக்கரந்தனர். மணக்கும் நீண்ட கூந்தலை
யுடைய இரேணுகை அந்நிலையே உலகினர்க்கொரு தெய்வம் ஆயினள்.

கலி விருத்தம்

காதரா அணியினாள் பலகைவாட் கையினாள்
போதரா சன்முதல் பலகணம் புடையுற
வேதரா சிகள்பயில் விரிபொழிற் காஞ்சியின்
மாதராள் ஆயிடைத் தெய்வமாய் வைகினாள்.     34

     கொல்லுகின்ற பாம்பினை அணியாகவுடைய இரேணுகை கேடகம்
வாளிவற்றைக் கையில் உடையளாய்ப் போதராசன் முதற் பல வீரர் கணம்
புடைசூழ வேதங்கள் பயிலப்பெறும் விரிந்த சோலையையுடைய காஞ்சியில்
அவ்விடத்துத் தெய்வமாக வைகினாள்.

எண்ணியாங் குதவிசெய் இரேணுகை ஈச்சரத்
தண்ணலார் பெருமையார் அளவிடற் பாலரே
கண்ணும்இக் காதை யக்கற்றுரைப் போரைஅவ்
வொண்ணுதல் தெய்வதம் ஊறுசெய் யாதரோ.     35

     எண்ணிய உதவும் இரேணுகேசத்தில் எழுந்தருளியுள்ள அண்ணலார்
பெருமையை யாவர் வரையறுத்துக் கூற வல்லவர். மதிக்கத்தகும் இக்
கதையைக் கற்றுப் பிறர்க்குணர்த்துவோரை அப் பெண்பாலாகிய தெய்வம்
வருத்தாது.

இரேணு கேச்சரப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-1608