477


யோகாசாரியர் தளிப் படலம்

கலி விருத்தம்

உரவுநீர்ச் சடைமுடிப் பகவனார் உமையொடும்
விரவிவாழ் இரேணுகை ஈச்சரம் விளம்பினாம்
பரசிரா மேச்சரத் தெனாதுபா லியோகமாக்
குரவர்சூழ் பஃறளித் திறன்இனிக் கூறுவாம்.      1

     பரவிய நீரைச் சுருக்கிய சடைமுடிப் பெருமானார் உமையம்மையா
ரொடும் ஒன்றிவாழ் இரேணுகேச்சரம் விளம்பினோம். பரசிராமேசத்துக்குத்
தெற்கில் யோகம் பூண்ட பெருங்குரவர் வலம் கொண்டு வணங்கும் பல
திருக்கோயில்களின் இயல்பை இனிக் கூறுவோம்.

சுவேதனே சுவேதகே துக்கருத் தொடர்பிலாச்
சுவேதசீ கன்சுவே தாச்சுவன் தூயசீர்க்
சுவேதலோ கிதனொடுஞ் சுதாரனே சாதனம்
சுவேதநீற் றணியொளிர் துந்துமி முதலியோர்.      2

     சுவேதன், சுவேதகேது, பிறவி நோய் தவிர்ந்த சுவேதசீகன்,
சுவேதாச்சுவன், அழுக்கில்லாத சிறப்பினையுடைய சுவேத லோகிதன்,
சுதாரன், உருத்திராக்கவடம் வெண்ணீற்றணி இவற்றால் விளங்குகின்ற
துந்துமி முதலியோர்,

ஏயும்மெய்த் தவம்அறா இலகுளீ சன்முடி
வாயினோர் மற்றும்எண் ணில்லவர் அகிலமும்
பாயசீர் யோகமாக் குரவர்கள் படைமழுத்
தூயவன் கூற்றினில் தோன்றியோர் இவர்கள் தாம்.   3

     பொருந்தும் உண்மைத் தவமுடைய இலகுளீசன் முடிவானோர் மேலும்
அளவிலோர் அகிலமுற்றும் பரவிய சிறப்பினையுடைய யோகாசாரியர்கள்
பரசு பாணியாகிய பிரானார் அம்சத்தில் தோன்றியோராகிய இவர்கள்.

யோகமாக் குரவர்தம் உயர்பதத் தெய்தவும்
மோகவல் வினையுறா முத்தியின் வைகவும்
போகுவெண் கயிலையின் மெய்த்தவம் புரிவுழி
ஏகநா யகன்அவர்க் கெதிரெழுந் தருளியே         4

     யோகாசாரியர் பதத்தைப் பெறவும், மயங்குகின்ற கொடுவினை பற்றாத
வீட்டினைத்தலைப்படவும் நீண்ட வெள்ளிமலையில் மெய்த்தவத்தைச்
செய்கையில் ஒருவனென்னும் ஒருவன் அவர் முன் எழுந்தருளி,