அறுசீரடி யாசிரிய விருத்தம் அம்மநீர் கச்சி மூதூர் அணுகிமா நீழல் வைகும் எம்மடி வழுத்தி வெவ்வே றிலிங்கம்அங் கிருத்திப் போற்றி மம்மர்தீர் தவங்கள் ஆற்றி வைகுமின் ஆண்டு நுங்கள் தம்மனக் கருத்து முற்றத் தருதும்என் றருளிச் செய்தான். 5 | ‘கேண்மின்! நீவிர் காஞ்சியாகிய பழம் பதியை எய்தி மாவடியில் வீற்றிருக்கும் எம்முடைய திருவடிகளைத் துதிசெய்து வேறு வேறு சிவலிங்கம் நிறீஇப் போற்றி மயக்கம் தவிர் தவம் புரிந்து தங்குமின் நுங்கள் மன நினைவு நிறைவெய்தத் தருவோம்’ என்றருளினர். மற்றவர் தொழுது போற்றி வள்ளலை விடைகொண் டேகி முற்றிழை மகளிர் நல்லார் ஊடலின் உகுத்த முத்தங் கற்றைவெண் ணிலவு கான்று கனைஇருள் பருகு நீண்ட பொற்றட நெடுந்தேர் வீதி பொலிதிருக் காஞ்சி நண்ணி. 6 | அவர் வணங்கித் துதிசெய்து வள்ளல்பாற் புறவிடைகொண்டு சென்று தொழில் முற்றுப் பெற்ற அணிகள் பூண்ட மகளிராகிய நல்லார் கணவரொ டூடிய புலவியில் அறுத்தெறிந்தமையால் உதிர்ந்த முத்துக்கள் தொகுதியாக வெள்ளொளியை உமிழ்ந்து செறிந்த இருளை விழுங்குகின்ற நீண்டகன்ற அழகிய நெடியதேர் செலற் குரிய வீதிகள் பொலிகின்ற திருக் காஞ்சியை நண்ணி, முழங்கிசை ஞிமிறு பாய முகைமுறுக் குடைந்து தீந்தேன் வழங்குபூங் கமலத் தெண்ணீர் மணிச்சிவ கங்கை தோய்ந்து பழங்கண்நோய் அறுக்கும் மாவிற் பகவனை வழிபா டாற்றித் தழங்கொலி மறையின் ஆற்றால் தனித்தனி இலிங்கஞ் செய்தார் 7 | இசையுடைய வண்டு பாய்தலால் அரும்புகள் கட்டவிழ்ந்து இனியதேனூறுகின்ற தாமரை மலரையுடைய அழகிய சிவகங்கை நீரில் மூழ்கித் துன்பத்திற்கேதுவாய பிறவியைப் போக்கும் மாவடியிற் பெருமானை வழிபாடு செய்து ஒலிகெழு வேத விதிப்படி வெவ்வேறிலிங்கம் தாபித்தனர். முன்பொரு காலத் தங்கண் முதல்வனைத் தொழுது முந்நூற் றைம்பதிற் றைவர் யோகா சாரிய ராகி முத்தி தம்பத மாகக் கொண்டார் அவரெனத் தாமும் அன்பின் நம்பனைத் தத்தம் பேரால் நலத்தக நிறுவிப் போற்றி. 8 | முன்னோர் காலத்தில் அவ்விடத்தில் முதல்வனைத் தொழுது முந்நூற்றைம்பத்தைவர் யோகாசாரியராகித் தம் பதவிகளாக வீடுபேற்றைக் கொண்டனர். அவரை ஒப்பவே இவர்களும் அன்பினால் கம்பனைத் தத்தம் பெயரமையச் சிவலிங்கம் தாபித்து நலம்படப் போற்றி. |