479


கறையணி மிடற்றுப் புத்தேள் கருணையால் உகங்கள் தோறும்
நிறைபுகழ் படைத்த யோகா சாரிய நிலைமை எய்திக்
குறைவிலா முத்தி பெற்றார் ஆங்கவர் குலவிப் போற்றும்
இறையவன் தளிகள் யார்க்கும் வீடுபே றெளிதின் நல்கும்.    9

     திருநீலகண்டப் பெருமான் திருவருளால் யுகங்கள் தோறும் நிறைந்த
புகழ் வாய்ந்த யோகாசாரிய நிலைமையையடைந்து என்றும் அழிவில்லாத
முத்தியின் பதத்தைப் பெற்றார்கள். அப்பதியி லவர்கள் இருந்து வழிபட்ட
சிவபெருமான் திருக்கோயில்கள் எவ்வகையோர்க்கும் முத்திப்பயனை
எளிதாகத் தந்தருளும்.

     யோகாசாரியார் பதம் பெற்றோர் மனுவந்தரம் எழுபத்தெட்டு
யுகங்களில் இருபத்தெட்டாங் கலியுகங்காறும் அப்பதத்திலிருந்து
நிலவுலகிலவதரித்துப் பல திருவிளையாடல்கள் புரிந்து முத்தி பெறுவது
வழக்காதலால் யோகாசாரிய நிலைமை எய்திக் குறைவிலா முத்தி பெற்றார்
என்றனர், மகான்களாவார் திருஞானசம்பந்தர் முதலானோர்.

வென்றிகொள் இனைய வெல்லாம் பரசிரா மேச்ச ரத்தின்
தென்றிசை தொடங்கிச் சார்வ தீர்த்தத்தின் வடபால் காறும்
ஒன்றருஞ் சுவேத லிங்க முதல்இல குளீசம் ஈறாத்
துன்றிடும் இவற்றுள் மேலாச் சொலப்படும் இலகு ளீசம்.     10

     வெற்றி வாய்ந்த இத்தளிகள் யாவும் பரசிராமேசத்தின் தென்திசையில்
தொடங்கிச் சருவதீர்த்தின் வடகரை வரையிலும் அடைதற்கரிய சுவேதலிங்கம்
முதலாக இலகுளீசம் இறுதியாக நெருங்கி விளங்கும். இவற்றுள் இலகுளீசம்
என்னுந் திருத்தலம் மேலாகப் போற்றப்பெறும்.

யோகாசாரியர் தளிப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 1618

சருவ தீர்த்தப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

இருட்கொடும் பிறவி மாற்றும் இலகுளீச் சரம்ஈ றாகத்
தருக்கறு காட்சி யோகா சாரியர் தளிகள் சொற்றாம்
மருத்துதை மலர்மேற் பூத்த வளம்புனல் குடைவோர் தங்கள்
கருத்தவிர் சருவ தீர்த்தக் கரைபொலி தலங்கள் சொல்வாம்.   1