480காஞ்சிப் புராணம்


     ஆணவமலச் சார்பினால் ஆகும்கொடிய பிறவியைப் போக்கும்
இலகுளீச்சரம் இறுதியாகச் செருக்கினை நீக்குதற்கு ஏதுவாகிய மெய்யறி
வினை நல்கும் யோகாசாரியர் திருக்கோயிலைப்பற்றிக் கூறினோம். இனி,
மணம் செறிந்த நீர்ப்பூக்கள் மேலெழுந்து பூத்த தீர்த்தத்திற் படிவோர்
தம் பிறவியை நீக்கும் சருவ தீர்த்தக் கரையில் விளங்குகின்ற தலங்களைக்
கூறுவோம்.

காமேச்சரம்

குடவளை அலறி ஈன்ற குரூஉமணித் தரளக் குப்பைப்
படலைவெண் ணிலவு கான்று படர்இருள் இரிப்ப ஞாங்கர்
உடைதிரை ஒதுக்குந் தெண்ணீர் ஒலிபுனற்சருவ தீர்த்தத்
தடநெடுங் கரையிற் காமேச் சரமெனுந் தலம்ஒன் றுண்டால்.  2

     குடத்தை ஒக்கும் வளைகள் அரற்றி ஈன்ற வெண்ணிற முத்துக்
குவியல்கள் தொகுதியாக வெள்ளிய நிலவை வீசிப் பரவுகின்ற இருளை
ஓட்டும்படி முரிகின்ற திரைகள் கரைமருங்கில் ஒதுக்கும் தெளிந்த
நீரையுடைய சருவ தீர்த்தக் கரையில் காமேச்சரம் எனப் பெயரிய தலம்
ஒன்றுளது.

கருப்புவில் குழைய வாங்கிக் கடிமலர்ப் பகழி தூண்டும்
அருப்பிளங் கொங்கைச் சேனை அடல்வலிக் காமன் முன்னாள்
மருப்பொதி இதழிக் கோமான் மனத்திடைப் பிறந்தான் ஐயன்
திருப்பதம் இறைஞ்சிப் போற்றி செய்துமற் றிதனை வேண்டும்.  3

     கரும்பாகிய வில்லை வளைய வளைத்து மணக்கும் மலரம்புகளைத் தொடுக்கும் தாமரை அரும்பினை ஒக்குந் தனத்தினையுடைய மகளிரைச் சேனையாகவுடைய மன்மதன் முன்னோர்கால் மணந்தங்கிய கொன்றை மலர் மாலையை அணிந்த பிரானாரது சித்தத்துள் தோன்றிச் சித்தசன் எனப்பெற்ற அவன் பிரானாரது திருவடிகளை வணங்கித் துதிசெய்து இதனை வேண்டுவன்,

மகப்பயில் பிறவிக் கேது வாகுவண் புணர்ப்பு நல்கி
இகப்பில்சீர் இரதிக் கென்றும் இனியனாய்க் கொடுப்போர்
                                        கொள்வோர்
அகத்திருந் தினைய செய்மை ஆற்றிஎன் ஆணை மூன்று
சகத்தினுஞ் செலுத்தும் பேறு தந்தருள் என்னக் கேட்டு.    4

     கருவுறுதற்குக் காரணமாக இந்நிலவுலகில் வளமுடைய இணை
விழைச்சினை வழங்கி நீக்கற்கரிய சிறப்பினையுடைய இரதிதேவிக் கென்றும்
இனியனாய் ஒன்றனைக் கொடுப்போரும் அதனைக் கொள்வோரும் ஆகிய
இருதிறத்தின் ருள்ளத் திருந்து அச்செய்கையை நிகழ்த்தி என்னரசாட்சி
மூவுலகினும் நடாத்தும் செல்வத்தைத்தந்தருள்க’ என்று வேண்டிடத்
திருச்செவி சாத்தியருளி,