குழைஉதை நெடுங்கண் செவ்வாய்க் கோமளச் சயிலப் பாவை விழைதகத் தழுவு மாற்றால் விரிசினைத் தனிமா நீழல் மழைதவழ் மிடற்றுப் புத்தேள் வருகென விளித்த ஞான்று தழைபுனல் தலைவ னோடுந் தடநதி வடிவந் தாங்கி. 9 | காதணியை மோதுகின்ற நீண்ட கண்களையும், சிவந்த வாயினையும், இளமையையும் உடைய இமாசலன் மகளார் தம்மை விரும்பித் தழுவு முறையால் கரிய மேகத்தை யொக்கும் திருக்கண்டமுடைய பிரானார் வரும்படி அழைத்தபொழுது நீர்க்கு நாயகனாகிய வருணனோடும் பெரியநதி வடிவினைமேற்கொண்டு. விழுமிய அண்டத் துள்ளும் புறத்தினும் விரவுந் தீர்த்தம் முழுவதுந் திரண்டு காஞ்சி முதுநகர்க் குடபால் எய்திக் கொழுமலர்த் தனிமா நீழற் குழகனை உமையாள் வல்லைத் தழுவலும் எழுந்த வேகம் தணிந்துமீட் டல்கி அங்கண். 10 | சிறந்த அண்டத்தின் உள்ளும் புறம்பும் உள்ளத் தீர்த்தங்கள் யாவும் கலந்து திரண்டு காஞ்சியின் மேற்றிசையில் எய்திக் கொழுவிய மலர்க் கொத்துக்களையுடைய ஒற்றை மாவடி நிழலில் விளங்குகின்ற இறையவனை உமையம்மையார் விரைந்து தழுவிய அளவில் எழுந்த வேகம் தணிந்து மறித்தவ்விடத்தே தங்கி, கலைமதிக் குழவி மோலிக் கடவுளைத் தீர்த்த ராசத் தலைவன்என் றிருத்தி வீங்குந் தடம்புனல் அருவிக் குன்றச் சிலைநுதற் பிடியி னோடும் அருச்சனை திருந்தச் செய்ய மலையினைக் குழைத்த திண்தோள் வள்ளலும் எதிரே நின்று. 11 | சந்திரகேசரரைத் தீர்த்தரச நாயகன் என்ற பெயரான் நிறுவிப் பெருகுஞ் சுனை அருவியையுடைய இமயமலையின் வில்லொக்கும் நுதலையுடைய பிடியினோடும் அருச்சனையைச் செம்மை பெறச்செய்ய மேரு மலையை வில்லாக வளைத்த திண்ணிய, தோளையுடைய வள்ளலும் எதிரெழுந்தருளி, இற்றைஞான் றாதி யாக நும்மிடத் தெய்தி மூழ்கிச் செற்றமில் முனிவர் விண்ணோர் தென்புல வாணர் தங்கட் குற்றநீர்க் கடன்கள் நல்கி உறுபொருள் உறுநர்க் கீந்து மற்றெமை ஈண்டுக் காண்போர் முத்தியின் மருவச் செய்கேம். 12 | ‘இந்நாள் முதலாக இங்கெய்தித் தீர்த்தமாகிய நும்முள் மூழ்கிக் கோப முதலிய தவிர்ந்த முனிவரர் தேவர், தென்புலத்தார் ஆகிய இவர்கட்கு உரிய நீர்க்கடன் முதலானவற்றை வழங்கிப் பெரும் பொருளை இரப்போர்க்கீந்து எம்மை ஈண்டுத் தரிசிப்போரை முத்தியிற் செலுத்துவோம்’ |