சருவதீர்த்தப் படலம் 483


இன்னமும் புகலக் கேண்மின் எனப்பெருங் கருணை கூர்ந்து
தன்னிகர் பிராட்டி ஆரத் தழீஇக்கொளச் செய்த வாற்றால்
அன்னதற் கியையக் கைம்மா றளிப்பவன் என்ன அங்கேழ்ப்
பொன்னவிர் சடையோன் தீர்த்தப் புனல்களுக் கிதனை நாட்டும். 13

     மேலும் கூறக்கேண்மின்’ என்று பேரருள் மீக்கூர்ந்து தன்னையே
நிகர் பிராட்டியை இறுகத்தழீஇக் கொள்ளச் செய்த அம்முறைக்குத் தக்க
பிரதியுபகாரம் அருளுதலொப்ப அழகிய பொன்போல மிளிரும் சடையுடையர்
தீர்த்த நீர்களுக்கு இதனை வலியுறுத்துவர்.

     புனல்கள்-தீர்த்த அதிதேவதைகள்.

கொலைகளிற் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலைவல் வீரக்
கொலைகருக் கொலைதாய் தந்தைக் கொலைகவைக்கோட்டு நல்லான்
கொலைமுதல் பிறவும் நீங்குங் கொடுவினைப் பாசத் தெவ்வைக்
கொலைபுரி மரபின் நும்பாற்குடைந்தெமைத் தொழப்பெற்றோர்க்கே
                                                     14

     கொலைகளிற் கொடுமை மிக்க பிரமகத்தி, வலிய வீரகத்தி, சிசுகத்தி,
மாதா பிதா கத்தி, இருகொம்பினையுடைய கோகத்தி முதலிய பிற பெரிய
பாவங்களும் கொடிய இருவினையாகிய பாசப்பகையைப் போக்குகின்ற
வழக்கின நுங்கண் மூழ்கி எம்மைத் தொழப்பெற்ற வாய்ப்புடையோர்க்கு
நீங்கும்.

முரிதிரை சுருட்டு தெண்ணீர் நும்மிடத் தொருகால் மூழ்கி
விரிபுகழ்த் திருவே கம்பம் விழைதகக் காணப் பெற்றோர்
உரிமையின் ஆன்ற நாற்கூற் றுறுதியும் பெறுவர் மீள
அரிவையர் அகட்டுள் எய்தா தெம்மருள் அகட்டின் வாழ்வார். 15

     ‘உடைகின்ற அலைகள் மறித்து வீசுகின்ற தெளிந்த நீராகிய நும்முள்
ஓர்கால் மூழ்கி விரிந்த புகழுடைய திருவேகம்ப நாயகனை விரும்பித்
தரிசனஞ்செய்தோர் தகுதியால் அமைந்த அறம்பொருள் இன்பம் வீடு
என்னும் உறுதிப் பொருள் நான்கனையும் பெறுவர்; பின்னர்ப் பிறப்பினை
எய்தார்; திருவருளிலடங்கி வாழ்வர்.

     அகடு இரண்டனுள் முன்னது வயிறு (கருப்பை); பின்னது நடுவிடம்.

என்றிது நிறுவித் தீர்த்த நாயகன் இலிங்கத் துற்றான்
அன்றுதொட் டங்கண் மேவும் அலங்கொளிச் சருவ தீர்த்தத்
தின்றடம் புனலின் மூழ்கி எழில்வளர் திருவே கம்பஞ்
சென்றுகண் டிறைஞ்சப் பெற்றோர் செய்கொலைத் தீமை தீர்வார். 16

     என்றிதனை நாட்டித் தீர்த்த நாயகன் இலிங்கத்துள் விரவினர். அந்நாள்
முதலாக அவ்விடத்துள்ள விளங்குகின்ற தெய்வத்தன்மையுடைய சருவதீர்த்த
நீருள் மூழ்கி அழகுவளர் திருவேகம்பப் பெருமானைச் சென்று கண்டு
வணங்கப் பெற்றவர் செய்த கொலைப்பாவங்களினின்றும் நீங்குவர்.