| சருவதீர்த்தப் பெருமை	 		| தந்தையைச் செகுத்த பாவம் தணந்தனன் பிரக லாதன் முந்தையோர்ச் செகுத்த பாவம் வீடணன் முழுதுந் தீர்ந்தான்
 மைந்துடைப் பரசி ராமன் வீரரை வதைத்த பாவஞ்
 சிந்தினன் சருவ தீர்த்தச் செழும்புனல் குடைந்த பேற்றால்    17
 |       பிரகலாதன் தந்தையாகிய இரணியனைக் கொன்ற பாவத்தையும்,    விபீடணன் தமையன்மாராகிய இராவண கும்ப கருணர்களைக் கொன்றமையால்
 நேர்ந்த பாவத்தையும், வலியமைந்த பரசிராமன் அரசரைக் கொன்ற
 பாவத்தையும் சருவதீர்த்தத்தில் மூழ்கிய புண்ணியப் பயனால் யாவரும்
 நீக்கிக்கொண்டனர்.
 		| அருச்சுனன் துரோண மேலோ னாதியர்ச் செகுத்த பாவம் பிரித்தனன் அசுவத் தாமன் பெருங்கருச் சிதைத்த பாவம்
 இரித்தனன் உலகில் இன்னும் எண்ணிலர் சருவ தீர்த்தத்
 திருப்புனல் குடைந்து தீராக் கொலைவினைத் தீமை தீர்ந்தார்.   18
 |       அருச்சுனன் துரோணர் முதலாம் ஆசிரியர்களைக் கொன்ற    பாவத்தையும், அசுவத்தமான் சந்திரகுலத்தரசர் மனைவியரின் கருவெலாம்
 சிதைத்த பாவத்தையும் இத்தீர்த்தத்தால் போக்கிக் கொண்டனன். மேலும்,
 உலகில் எண்ணிலார் சருவ தீர்த்தத் தெய்வநீரில் மூழ்கிக் கழுவாயில்லாத
 பாவங்களும் கழுவப் பெற்றனர்.
 		| சிலைநுதல் மகளிர் மைந்தர் இன்றும்அத் தெண்ணீர் மூழ்கின் கொலைவினைப் பாவந் தீர்வார் குரைகடற் பரப்பென் றெண்ணித்
 தலைவரு முகிலின் கூட்டந் தனித்தனி வாய்ம டுக்கும்
 அலைபுனல் சருவ தீர்த்தப் பெருமையார் அளக்கற் பாலார்.    19
 |       மகளிரும், ஆடவரும் இன்றும் அந்நீரில் மூழ்கினால் கொலை செய்த    பாவமும் நீங்குவர். ஒலிக்கின்ற கடலென எண்ணி மேகக் கூட்டங்கள்
 தனித்தனி பருகும் அலைகளையுடைய சருவதீர்த்தப் பெருமையை யாவர்
 அளக்க வல்லவர்?
 கங்காவரேச்சரம்	 		| மற்றதன் கரையின் கீழ்பால் வருணன்எம் பெருமான் றன்னை முற்றிழைக் கங்கை யாளோ டிருத்திமுன் தொழுது நீருள்
 உற்றுறை உயிர்க்கும் நீர்க்கும் ஒருதனித் தலைவ னாகப்
 பெற்றனன் அதன்பேர் கங்கா வரமெனப் பிறங்கு மாலோ.   20
 |       அத்தீர்த்தத்தின் கிழக்குக் கரையில் வருணன் எமது பெருமானைக்     கங்கையாளோடும் தாபித்துத் தொழுது நீரில் வாழுயிர்களுக்கும், நீர்க்கும்
 ஒப்பற்ற தனித் தலைமையை எய்தினன். அத்தலைப் பெருமானார்
 கங்காவரேசுரர் எனப்பெயர் பெறுவர். பிறங்கல்-விளங்குதல்.
 |