பேரிருளை நீக்கி ஒளியைப் பரப்பிப் பயிரை வளர்க்கும் சந்திரன் தேன் மருவிய தாமரை அரும்பை மலர்த்துஞ் சருவ தீர்த்தத்திற்குத் தெற்கில் நறிய சுவையையுடைய தெள்ளிய அரிய அமுத மயமான நீர் நிலையை அகழ்ந்ததன் கரையில் நற்பண்பமையச் சிவபிரான் திருவடிகளை அருச்சனை செய்து பயனைப் பெற்றனன். சந்திரனுக்குச் சசியாதிபதி என்னும் பெயர் காண்க. நலம்ஒன்று செவ்வந்தீச் சரக்கீழ் ஞாங்கர் ஏழ்இலிங்கம் நிலமைந்தன் மதிமைந்தன் வியாழம் வெள்ளி நீடுசனி அலமந்த இருபாந்தள் அருச்சித் தருங்கோள் நிலைபெற்றார் வலம்வந்தங் கவைதொழுவோர் தம்மைக்கோள்கள் வருத்தாவால். 6 | நன்மை பொருந்திய செவ்வந்தீச்சரத்திற்குக் கீழ்த்திசையில் செவ்வாய், புதன், குரு, வெள்ளி, சனி மனச்சுழற்சியுடைய இராகு கேதுக்கள் ஆகிய எழுவர் ஏழிலிங்கம் நிறுவி அருச்சனை புரிந்து கிரக நிலையை அடைந்தனர். அத்தலங்களுள் சூழ்வந்து வணங்குவோரைக் கிரகங்கள் வருத்தாவாய் நற்பயனை விளைக்கும். நீடு சனி ஓரோர் இராசியிலும் இரண்டரையாண்டுகள் தங்குதலின் நீடு சனி என்றனர்; மந்தன் என்னும் பொருளையும் காண்க. நவக்கிரகேசப் படலம் முற்றிற்று ஆகத் திருவிருத்தம் -1650 பிறவாத் தானப் படலம் கலி விருத்தம் பவன னோடொன் பதிற்றுக் கோள்களும் இவறிப் போற்றும் இடங்கள் கூறினாம் சிவனைச் செவ்வாய் முதலி யோர்தொழும் புவியிற் பிறவாத் தானம் போற்றுவாம். 1 | வாயுவும் ஒன்பது கோள்களும் விரும்பிப் போற்றும் தலங்களைப் போற்றினோம்; இனி, முதல்வனைச் செவ்வாய் முதலானோர் வணங்கும் இருக்கைகளை அடுத்துள்ள பிறவாத் தானத்தைப் போற்றுவோம். |