திருமகள் விழைதரு திகழ்மருமச் செம்மலும் அடியிணை தொழுதினிஇம், மருள்எனை ஒருபொழு தினும்அடரல் உன்னடி வழிபடுசெயல்பிறழல், கருமுகில் உறழ்மிட றுடையவநின் கருணைஎன் னிடைநிலை பெறநிறுவில், ஒருகுறை உளதுகொல் அடியடியேற் கென்றுள மகிழ்வுடன் ஓதினனால். 16 திருமகள் விரும்புகின்ற விளக்கமமைந்த மார்பினையுடைய திருமாலும் திருவடிகளைத் தொழுதினி இம்மயக்கம் என்னை ஓர் காலத்தும் அணுகற்க. உன்னடித் தொண்டில் பிறழற்க. நீர்கொண்ட மேகம் போலும் திருக்கழுத்தினனே! நின்கருணையை என்னிடை நிலைபெற நிறுவினால் அடியின் கீழுறையும் அடியேனுக்கு ஓர் குறைபாடு உண்டு கொல்லோ, என்று உவகையுடன் கூறினர். அயனும் அரியும் அருள்பெற் றுய்தல் அறுசீரடி யாசிரிய விருத்தம் இவ்வண்ணம் இருவர்களும் இரந்தேத்தி விண்ணப்பஞ் செய்யக் கேளா, அவ்வண்ண மாகவெனப் பெருங்கருணை கூர்ந்தருளி அகிலம் ஈன்ற, மைவண்ணக் கருங்கூந்தல் முலைச்சுவடும் வளைத்தழும்பும் மாறா மேனிச், செவ்வண்ணப் பரமேட்டி பின்னரும்அங் கவர்க்கிதனைத் தெரித்துக் கூறும். 17 இங்ஙனம் இருவரும் இரந்து புகழ்ந்து வேண்ட அனைத்துலகங்களையும் பயந்த மிகக் கரிய கூந்தலையுடைய அம்மையாரின் தனத்தழும்பும், வளைத்தழும்பும் அகலாத திருமேனியையுடைய சிவபரஞ்சுடர் பின்னரும் இதனை எடுத்துக் கூறும். இற்றைநாள் நீர்காணும் இவ்விலிங்கப் பெருவடிவம் இறுதிக் காலம், முற்றுநாள் அணுகாது கொற்றங்கொள் திருக்காஞ்சி மூதூர் மாடே பற்றுபெருங் காதலினால் தாபித்து வழிபட்டுப் பரசி ஆனாப், பெற்றியுறு வியனுலகம் படைத்தளிக்கும் பெருமதுகை பெற்று வாழ்மின், 18 இந்நாள் நீவிர்காணும் சிவலிங்க இப்பெருவடிவினை ஊழிக்காலத்திலும் அழியாத வெற்றியையுடைய திருக்காஞ்சி மாநகரிடத்துப் பெருவிருப்பொடும் நிறுவி வழிபட்டுத் துதிசெய்து அமையாத இயல்பினையுடைய பேருலகைப் படைத்துக் காக்கும் பேராற்றலைப் பெற்றுவாழ்மின். வெண்டிரைநீர் அகல்வரைப்பின் நும்முதலோர் விண்ணவர்கள் அவுணர் சித்தர், பண்டைவினைக் குறும்பெறியும் முனிவரர்மா னிடர்யாரும் பாசக் கூட்டம், விண்டகலும் படிஇன்று தொட்டெம்மை இலிங்கத்தின் மீளா நேசங், கொண்டுபூ சனைபுரிக புரிவோர்க்கு மயல்என்றுங் குறுக லோம்பல். 19 |