498காஞ்சிப் புராணம்


     வெள்ளிய திரையுடைய நீர்சூழ்ந்த அகன்ற நிலவுலகில் நும்மோருடனும்
ஏனோராம் விண்ணவரும், அவுணரும், சித்தரும், பழைய வினைத் தீமையை
அழிக்கும் முனிவரரும், மானிடரும் யாவரும் பாசக் கூட்டம் நீங்கும்படி
இந்நாள் முதல் எம்மைச் சிவலிங்கத் திருவுருவில் பெயராத பெருவிருப்பங்
கொண்டு பூசனையைப்புரிக. புரிபவர்க்கு மயக்கம் குறுகுதலொழிக.

     முற்செய்யுளில், அடரல். பிறழல் என்பவற்றுள் அல்விகுதி வியங்கோள்
எதிர்மறையினும், இச்செய்யுளில் ஓம்பல் அல்விகுதி உடன் பாட்டினும்
வந்தன. ‘‘மகனெனல், மக்கட் பதடி எனல்” (திருக். 196) இருபொருளினும்
வந்தமைகாண்க.

     கடப்பாடு வறுமைபயம் மனக்கவலை பசிபாவங் கடுநோய்
மற்றும், உடற்றாமை ஆங்கவர்க்கு மீளவினைப் பிறவியுறல் உறினும்
இன்பங், கிடைத்தானாப் பெருமகிழ்ச்சி தலைசிறப்ப நனிவாழி கிளருஞ்
சீற்ற, நடைக்காலன் மற்றவர்பால் நணுகற்க நம்ஆணை வலியான்
மன்னோ.                                            20

     அங்ஙனம் முறையாகப் பூசனை புரிவோர்க்கு வறுமையும், அச்சமும்,
மனத்துன்பமும், பசியும், பாவமும், கொடிய நோய்களும், பிறவும் வருத்தாத
வண்ணம் வினையால் வரும் பறிவி பொருந்தாதொழிக, உற்றாலும் இன்பம்
வாய்த்து நீங்காத பெருமகிழ்ச்சி மீக்கொள்ளப் பெரிதும் வாழ்வார்களாக.
பொங்குங்கோபம் இயல்பாகவுடைய இயமன் நம்முடைய கட்டளையால்
அவரை அணுகா தகல்க.

     வேதியர்மன் னவர்வணிகர் வேளாளர் சங்கரத்தின் மேயோ
ராக, மூதிமையோர் உரகர்தயித் தியர்அரக்கர் கந்தருவர் முனிவ
ராகப், பூதிதரும் இலிங்கபூ சனைஇல்லார் பூதிசா தனங்கள் பேணார்,
ஏதிலராம் இழிஞரினும் இழிஞரே அவரொடுபேச் சியம்பினோரும்.  21

     அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், சங்கர சாதியினர் எனினும்
ஆக, பெருமையுடைய தேவர், நாகர், அசுரர், அரக்கர், கந்தருவர், முனிவர்
இவர் தம்முள் ஒருவரேனும் ஆகச் செல்வத்தைத்தரும் சிவலிங்க பூசனையை
மேற்கொள்ளாதவரும், விபூதி, உருத்திராக்க முதலிய சாதனங்களைப்
போற்றாதவரும் அயலவராவர். அவரொடு பேசுவோரும் கீழ் மக்களுள்ளும்
கீழோராவர்.

     நியதிமகம் தவம்தானம் விரதநிலை பிறவற்றின் நிகழ்த்தும்
பூசைப், பயன்எவையும், இலிங்கபூ சனைக்கோடி கூற்றின்ஒரு பயனுக்
கொவ்வா, வியனுலகம் உய்யுமுறை இவ்வாறு நமதாணை விதித்தேம்
போற்றி, உயலுறுவீர் என்றருளிச் சிவபெருமான் அடியார்உளக்
கோயில் புக்கான்.                                       22