50காஞ்சிப் புராணம்


     வானுலகை அளாவிய சிகரத்தையுடைய மலையிலுள்ள
மூங்கிலிற்றோன்றிய வெள்ளிய முத்தமும், கடற்கரை வைப்பிற் பொருந்த
நறுமணம் வீசும் புன்னை மரங்கள் சொரிந்த அரும்பும் இடங்களின் மயங்கிக்
கிடத்தலால் அவற்றொடு கலந்த குளிர்ந்த தம்முடைய முட்டைகள் இவை
என்று பகுத்தறிய இயலாமையால் தளர்ச்சி கொண்டு நோக்குவோருடைய
கண்கள் புல்லென்னும்படி வளம் படைத்த மருத நிலத்து அன்னம் துயர்மிகும்
காட்சியையுடையது ஓர்புறம்.

     குறுஞ்சுனையிற் களிவண்டு சுழன்றாடுங் கான்குயில்கள்
குரைநீர்ப் புன்னை, தொறும்பொதுளுங் கருங்கொடிதன்
குடம்பையிற்போய்க் கருவுயிர்த்துச் சுலவி மீண்டு, உறும்பிரச
மலர்க்காஞ்சிச் சினையேறி ஒளியிருந்து நாடிக் காலம், உறுந்துணையும்
இனிதுறையும் உலவாத வளங்காட்டி ஓங்கும் ஓர்பால்.       141

     குறுஞ்சுனையிற் கள்ளுண்டு களித்த வண்டுகள் சுழன்று திரியும்
முல்லைநிலக் குயில்கள், ஒலிக்குங் கடற்கரையில் வளர்ந்த புன்னை மரங்கள்
தோறும் செறியும் கரிய காக்கையின் கூட்டிற் சென்று முட்டையை ஈன்று
சுழன்று அங்கு நின்றும் திரும்பி நறுமணங்கமழும் தேன் சிந்து மலர்களுடைய
காஞ்சி மரத்தின் கிளையிலேறி ஒளித்திருந்து ஆராய்ந்து, பார்ப்பாகுங்காலம்
வாய்க்குமளவும் இனிதாக வசிக்குங் கெடாத வளத்தைக் காட்டி உயர்ந்து
தோன்றாநிற்கும்.

     முல்லை, மருதம், நெய்தல்களின் மயக்கம் கூறிற்று இப்பாடல்.

     குறுஞ்சுனையும், குயிலும். முல்லை நிலத்தன. குரைநீர், (கடல்) புன்னை,
கொடி (காக்கை) நெய்தல் நிலத்தன, காஞ்சி, மருதநிலக் கருப்பொருள்.

     கறிக்கொடியுந் துகிர்க்கொடியும் நெடுவயலைப் பசுங்கொடியுங்
கமழ்தேன் மௌவல், வெறிக்கொடியும் நாற்றிசையுந் தாய்ப்படர
நடுவளர்ந்த விரைக்கு ராமேல், கிறிக்கொடிய பெருங்காற்றாற்
பல்காலும் அசைபாவைக் கிளர்ச்சி வாள்கண், மறிக்கொடியுங்
கூத்தியர்செய் கயிறுவிசி கழைக்கூத்தின் வயங்கும் ஓர்பால்.     142

     மிளகுக்கொடியும், பவளக்கொடியும், நெடிய வயலையின் பசிய
கொடியும், தேன் கமழும் மல்லிகையின் மணமிக்க கொடியும் நாற்றிசையினும்
தாவிப்படர நடுவில் வளர்ந்த மணம் உடைய குராமரத்தின்மேல்
கிறியென்னும் ஒலிக்குறிப்பையுடைய மிகப்பெரிய காற்றால் பன் முறையும்
அசையும் அம்மரத்தின் காயாகிய பாவையின் தோற்றம் கண்ணாகிய மானுக்கு
வாள் தோற்கும் கழைக் கூத்தாடு மகளிர் ஆடும் கயிறு கட்டிய
கழைக்கூத்தைப்போல விளங்கும் ஓர்புறம்.

     மிளகு, பவளம், வயலை, மௌவல் ஆகிய இந்நான்கு கொடிகளும்
முறையே குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை ஆகிய இந்நான்கனையும்
தமக்கு இடமாக உடையன. குரா பாலையது.