முற்றழிப்புக் காலத் திருக்கூத்து வள்ளவாய் நறைக்கமல வெண்பீடத் தரசிருக்கும் மாதர் அன்னப், புள்ளவாம் நடைநல்லாள் முலைமுகட்டில் கோட்டியபூங் களபந் தோய்ந்த, கள்ளவாந் தொடைத்திண்தோள் மறைக்கிழவன் ஒருவனுக்குக் கடையேன் உள்ளத், துள்ளவாம் இறைவகுத்த பராத்தங்கள் ஓரிரண்டும் ஒழிந்த காலை. 2 கிண்ணம்போலும் வாயினையுடைய தேன்மருவிய வெண்டாமரை மலர்த் தவிசில் வீற்றிருக்கும் அழகிய அன்னப் பறவை விரும்பும் நடையினை யுடைய சரசுவதி கொங்கையில் திமிர்ந்த பொலிவுடைய கலவைச் சந்தனம் படிந்த தேனுடைய ஆகும் மாலையை அணிந்த திண்ணிய தோள்களையுடைய பிரமன் ஒருவனுக்குக் கடையனேனது மனத்துள் விரும்பி வீற்றிருக்கும் சிவபிரானார் வகுத்தருளிய பராத்தங்கள் ஓரிரண்டும் ஒழிந்த காலையில், பிரமன் வாழ்நாளைக் காலப் பிரமாணத்துட்காண்க. ஐவண்ண நிறம்படைத்த திருமுகம்ஐந் துடையபிரான் அருளால் அந்திச், செவ்வண்ணக் காலத்தீ உருத்திரப்புத் தேள்நுதற்கண் செந்தீப் பொங்கி, மொய்வண்ண அண்டமெலாம் முழங்கிநிமிர்ந் தெழுந்துருக்கி உண்டு தேக்கி, மெய்வண்ண மனத்தன்பர் வினைப்பறம்பின் நீறாக்கி விட்டதாக. 3 ஐந்து நிறங்களமைந்த திருமுகங்கள் ஐந்துடைய பெருமான் திருவருளால் மாலைக் காலத்துச் செவ்வானம் போலும் செந்நிறமுடைய காலாக்கினி உருத்திரருடைய நுதற்கண்ணினின்றும் எழுந்த தீ பேரொலி செய்து மேலோங்கி வலிய அண்டங்கள் அனைத்தையும் நெகிழச் செய்து விழுங்கித் தெவிட்டி மெய்த்தன்மையுடைய மனத்தன்பர்தம் வினையாகிய மலை நீறாவதுபோல நீறாக்கிவிட்டதாக, ஆயநாள் இரவில்லை பகல்இல்லை அயன்இல்லை அரியும் இல்லை; மேயவான் முதல்பூதம் இலைஏனைப் பவுதிகத்தை விளம்புமாறென், பாயபே ரண்டமெல்லாம் இவ்வாறு படநீற்றிப் புரமூன்றட்ட, காய்கணையோன் ஆனந்த மேலீட்டின் தன்னியல்பு கருத்துட் கொள்ளா. 4 அப்பொழுது இரவும் பகலும் இல்லை; மாலும் அயனும் இல்லை; இடங்கொடுக்கும் வானம் முதலாகிய பூதங்கள் இல்லை; பூதக்கூட்டுறவால் ஆகிய பொருள்களைப்பற்றிப் பேச என்னுள்ளது. பரவிய பேரண்டங்களை எல்லாம் இவ்வாறழிய நீறாக்கி முப்புரங்களை அழித்த எரி அம்பினனாகிய பெருமான் ஆனந்தக் களிதுளும்பலின் தன் இயல்பைக் கருத்துட்கொண்டு, |