கடைநாளும், அழியாது தன்ஒருபாற் பெருமாட்டி காப்ப வைகும், நடைமாறாத் திருக்காஞ்சி நகர்மன்னி உலகீன்ற நங்கை காண, இடையாம இரவெல்லாம் திருக்கூத்து நவின்றருளி எறுழ்கால் வெள்ளை, விடையாளுந் தனிப்பாகன் ஆர்த்தார்த்து வீரநகை விளைத்தான் மேன்மேல். 5 அம்மையார் காத்தலால் ஊழியினும் அழியாது நிற்கும் ஒழுக்கம் கெடாத திருக்காஞ்சியில் நிலைபெற் றுலகங்களைப் பயந்த அவ்வம்மையார் காணும்படி இடைப்பட்ட இராப்பொழுது முற்றும் உயிர்கள் பிறத்தற்கு ஆம் தகுதி பெறும் திருக்கூத்தினை நடாத்தி வலியமைந்த வெள்விடைத் தனிச்சேவகனார் ஆரவாரித்து வீரப் பெருஞ்சிரிப்பு மேலும் சிரித்தனர். அவ்விரவு புலர்காலைத் திருநடனம் நீத்திலிங்க வடிவ மாகி, அவ்வரைப்பின் விளங்கினான் ஆதலினால் வீராட்ட காசத் தேவாம், அவ்விலிங்கம் வழிபட்டுச் சிலர்சித்தர் அற்புதமாம் சித்தி பெற்றார், அவ்வியல்பு தனைக்கேட்டுக் கொங்கணமா முனிச்செல்வன் அங்கண் எய்தி. 6 உலகெலாம் படைத்த அந்நிலையில் திருநடம் ஒழித்துச் சிவலிங்க வடிவமாகி அச்சூழலில் விளங்கினார். ஆகலான் வீராட்டகாசப் பெருமானாராம் அச்சிவலிங்கத்தை வழிபாடு செய்து சித்தர் சில்லோர் அற்புதமாகிய சித்திகளைப் பெற்றனர். அத்தன்மையை அறிந்து கொங்கண முனிவரரும் அங்கெய்தி. மந்தஹாசம்-புன்சிரிப்பு-அட்டஹாசம்-பெருஞ்சிரிப்பு. கொங்கண முனிவர் வழிபாடு அவ்விலிங்க மேன்மையினை அளந்தறிவான் ஆங்கதன்றன் சென்னி மீது, செவ்வனே தன்குளிகை ஈந்திட்டான் மற்றவற்றின் சிரமேல் வைப்பின், எவ்வமுற நீறாக்கும் அனையதைஅக்கணமேஅவ் விலிங்கம் உள்ளால், வௌவியது தனைக்கண்டான் வியப்பெய்தி அவ்விலிங்க முன்னர் வைகி. 7 அச்சிவலிங்க மேன்மையை ஆராய்ந்தறியும் பொருட்டு அப்பிரான் திருமுடிமேல் தன் குளிகையைப் பதியவைத்தனன். பிற படிவங்களின் சிரமிசை வைப்பின் அதனை நீறு படுத்தும் அக்குளிகையை அப்பொழுதே அவ்விலிங்கம் தன்னுள் இழுத்துக்கொண்டது. அதனைக் கண்ட கொங்கண முனிவர் அதிசயமெய்தி அம்மூர்த்தியின் திருமுன்னரிருந்து, |