வீராட்டகாசப் படலம் 503


எம்பெருமான், மின்னிடை மருங்குல் உமையுடன் ஒருநாட்கறங்கு
வெள் ளருவியஞ் சாரல், தன்னிறம் மாண்ட மந்தரப் பறம்பின்
தனியிடத் தினிதுறும் ஏல்வை.                             11

     நல்ல நிறம் வாய்த்த அச்சத்தைத் தருகின்ற இயல்பினையுடைய
பரப்பும், பெருமையும், அலைகளையும் உடைய பாற்கடலின் நிறம்
புன்மையான நிறமாகப் புலப்பட வெள்ளொளியை விரிக்கும் குற்றமற்ற
கயிலாய பதியாம் எமது பெருமானார் மின்னலை ஒக்கும் இடையினையுடைய
உமையம்மையாருடன் ஒருநாள் ஒலிக்கின்ற அருவி யிழிகின்ற சாரலை
யுடைய நிறத்தால் மாட்சிமை எய்திய மந்தர மலையில் தனியிடத்து
விரும்பியுறையும் காலை,

     எழால்மிடற் றளிகள் கொள்ளைகூட் டுண்ண ஈர்ந்தொடை
நறாவிரி ஐம்பால், கழாமணி மேனிப் பிராட்டியை நோக்கிக் காளி
என் றெம்பிரான் அழைப்ப, வழாநிலைக் கற்பின் உள்ளகம்
வெதும்பி வரிவிழி நித்திலம் உகுத்துக், குழாமுடை இமையோர்
ஏத்தெடுத் திறைஞ்சுங் கோமளை இன்னது கூறும்.            12

     யாழ் நரம்பின் ஒலியை ஒத்த ஒலியைச் செய்யும் கண்டத்தினை
யுடைய வண்டுகள் மிகுதியாகப் பெற்றுப் பருகும்படி சூடிய ஈரியமாலை
தேனைச் சிந்துகின்ற கூந்தலையுடைய சாணை பிடியாத நீலமணியை ஒக்கும்
திருமேனியையுடைய உமையம்மையாரை எமது பெருமானார் நோக்கிக்
‘காளீ’ என்று கூப்பிட வழிநிற்றலிற் பிழையாத கற்பினையுடைய
பெருமாட்டியார் திருவுள்ளம் வருந்தி அரிபரந்த கண்களில் நீர்த்துளிகளாகிய
முத்துக்களைச் சிந்தி,

     விடுந்தகைக் காள் நிறம்படைத் துளன்யான் வெண்ணிறம்
படைத்துளை நீயே, நெடுந்தகாய் நமக்குப் புணர்ச்சி எவ்வாறு
நிகழும்மற் றிங்கிது காறும், கடுந்தகை என்மாட் டருளினால்
இன்பக் கலவியில் திளைத்தனை இனிநான், அடுந்தகைப் படையோய்
கவுரியாம் வண்ணம் பெறுமுறை அருடிஎன் றிரந்தாள்.          13

     ‘விடத்தக்க கரிய நிறமுடையேன். அடியேன்’ வெண்ணிற மேனியீர்
ஆவீர் நீவிர். நம்முள் மனப்பொருத்தம் எங்கனம் கூடும். வெறுத்தற் குரிய
இயல்பினையுடைய என்னிடத்துத் திருவுளம் இரங்கி இன்பம் ஏற்றருளினர். இனி, சூலபாணியீர்! அடியேன் பொன்னிறத்தால் கவுரியாம்படி அருள்
செய்வீர்’ என்றிரந்தனர்.

     பொலங்குவட் டிமயப் பனிவரைப் பிராட்டி புகன்றன திருச்செவி
சாத்தி, இலங்குவெண் ணீற்றுச் சுந்தரக் கடவுள் இயம்புவான் வரிவிழி
கேட்டி, கலங்கஞர் எய்தேல் கடவுளர் கருமப் பொருட்டுனை இம்
முறை அழைத்தேம், நலங்கொள உலகம் நாள்தொறும் புரத்தல்
நங்கட னாதலின் கண்டாய்.                                14