வீராட்டகாசப் படலம் 509


பெருங்கரையின் பக்கத்தே கரிய குழலினையுடைய காமாட்சியம்மையார்
இனிது வீற்றிருந்து தவஞ் செய்யும் இருக்கையைக் கண்டனள்.

     அனையநல் வரைப்பு நுண்பில மாகி அருட்பர வெளியதாய்த்
திகழும், கனைகடல் உடுக்கை நிலமகட் குந்தித் தானமாம் கமழ்நறுங்
கடுக்கை, தனிமுதற் பிரமந் தனக்கொரு வடிவாம் தாழ்குழல்
உமையவட் கடியார், வினைதபு மூலத் திருவுரு அதுவே விளங்கொளிக்
காஞ்சியம் பதியுள்.                                      31

     அந்நல்லிடம் நுண்ணிய பிலாகாசமாகியும் பேரருட் சிதாகாசமாகியும்,
விளங்கும், ஒலிக்கின்ற கடலைஆடையாக உடைய பூமிதேவிக்குக்
கொப்பூழிடமுமாகும். மணங் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த
முழுமுதற் பிரமத்திற்கு ஓர் திருவுருவமாகும். மேலும், விளங்கும் ஒளியுடைய
காஞ்சிமாநகரில் தாழ்ந்த கூந்தலையுடைய உமையம்மையார்க்கு,
அடியராயினார் வினையைக் கெடுக்கின்ற மூலத்திருவுருவமும் அதுவேயாகும்.

     குறைவிலா நிறைவாய் உண்மையாய் அறிவாய்க் கொட்புறு
மனமடங் கிடமாய், மறைமுடிப் பொருளாய் இன்பமாய்ச் சிவமாய்
மாசற வயங்குபே ரொளியை, நிறைதவ யோகத் தலைவர்இவ் வாறு
நெஞ்சகத் தேவழி படுவார், அறைகடற் பரப்பிற் காஞ்சிமா நகரின்
ஆயிடை வழிபடு வாரால்.                                32

     குறைவில்லாத முழு நிறைவாயும், சத்தாயும், சித்தாயும், நின்றுழி
நில்லாது சுழலும் மன விருத்தியைக் கடந்ததாகியும், வேதாந்தப்
பொருளாகியும், ஆனந்தமாகியும், சிவமாகியும் இவ்வியல்பிற் குற்றமற
விளங்கு பேரொளியை நிறைந்த யோகமாகிய தவத்தையுடைய முதல்வர்
இத்தன்மையாக அகத்தேயும் நெஞ்சிடை வழிபடுவர். ஒலிக்கின்ற கடல்
சூழ்ந்த வைப்பிடைக் காஞ்சிமா நகர்க்கண் அப் பிலாகாயத்தும் வழிபாடு
செய்வர்.

காமகோடிப் பெயர்க் காரணம்.

     ஒருமுறை அங்கட் காமமாம் தருமம் உஞற்றுநர் தமக்கும் அத்
தருமம், தருபயன் கோடி யாதலிற் கரடத் தடத்திழி கடாம்படு கலுழிப்,
பெருவரை வதனப் பிள்ளைக் குகனைப் பெற்றவள் அமர்பிலம்
அதுதான், கருதரு காமக் கோடிஎன் றுலகிற் காரணப் பெயரினால்
வயங்கும்.                                              33

     அங்கு ஒருமுறை, நிஷ்காமியமாய்ப் புரியாது காமியமாய்த் தருமம்
புரிவோர்க்கும் அத்தருமப் பயன் கோடி முறையாகப் பெருகுதலின் சுவட்டின்
வழி இழிகின்ற மத நீராற்றினையுடைய பெரிய மலையாகிய யானை
முகமுடைய மூத்த பிள்ளையாரையும், குகப்பெருமானாரையும் பயந்த
அம்மையார் எழுந்தருளியுள்ள பிலம் அதுவே, எண்ணரிய காமக்கோடி
என்றுலகிடைக் காரணப் பெயரினால் விளங்கும்.

     விரும்பிய பொருள் கோடியாகப் பயத்தலின் காமகோடியாயிற்று.