வீராட்டகாசப் படலம் 511


     மற்றும்ஆ ருயிர்சேர் நாற்பொருட் பயனில் வகுத்தமூன் றாவது
காமம், பற்றுகா மத்திற் கோடியா முடிவிற் பயில்வது வீடுபே றாகும்,
உற்றவர் தமக்கு வீடுபே றளிக்கும் உண்மையினாலும்அப் பெயராற்,
சொற்றிடப் படுமால் உலகெலாம் ஈன்றாள் அமர்ந்தருள் சுடரொளி
விமானம்.                                              37

     இன்னும், உயிர்கள் பெறற்குரிய உறுதிப்பயன் நான்கனுள்
மூன்றாவதாவது காமம், பற்றுகின்ற காமத்திற்குக் கோடியாக முடிவில்
நிற்பது வீடு பேறாகும், அடியடைந்தவர் தமக்கு வீடு பேற்றினை நல்கும்
அவ்வுண்மையினாலும் உலகெலாம் ஈன்ற பெருமாட்டியார் வீற்றிருக்கும்
சுடரொளி விமானம் அப்பெயர் மேவும்.

     பின்னரும் ஒன்று ககரமே அகரம் மகரமாப் பிரிதரும் மூன்றும்,
அன்னஏ றுகைக்கும் அயன்அரி ஈசன் ஆயமுத்தேவரைப் பகரும்,
இன்னவர் தம்மை யுகந்தொறுங் கோடி முறைஎழில் விழிகளிற்
படைத்தாள், மின்னிடைப் பிராட்டி என்பத னாலும் அப்பெயர்
விளங்கும்என் பதுவே.                                   38

     வேறும், ஒன்று பேசப்பெறும்; ‘க’வும், ‘அ’வும், ‘ம’வும் ஆய்ப்பிரி
தருகின்ற மூவெழுத்துக்களும் அரசவன்னத்தை ஊரும் பிரமனையும்,
கருடனை ஊரும் திருமாலையும், விடையுகைக்கும் ஈசனையும் குறிப்பனவாகும்.
இவர் தம்மை யுகம் தோறும் கோடிமுறை அழகிய விழிகளாற் படைத்தனர்
மின்னலை ஒக்கும் இடையினையுடைய பிராட்டியார் என்னும் ஏதுவானும்
அப்பெயர் விளங்கும்.

     க+அ+ம=காம. க-பிரமன். அ-மால். ம-உருத்திரன். திருவேகம்பப்படலம்
23ஆம் செய்யுள் அட்சி-கண். காம+அட்சி=காமாட்சி.

     வேறும் ஒன்றாங்கட் காவெனப் படுவாள் வெண்மலராட்டி மா
என்பாள், ஊறுதேங் கமலப் பொகுட்டணை அணங்காம் ஊங்குவர்
இருவரும் முகிலை, மாறுகொள் ஐம்பால் உமைவிழிக் கோடி
தன்னிடை வருமுறை யானும், ஏறும்அத் திருப்பேர் எம்பெரு மாட்டிக்
கென்றெடுத் தியம்புவர் உணர்ந்தோர்.                       39

     பிறிதும் ஒன்றுண்டு:  ‘கா’ என்னப்படுவாள் வெண்டாமரை மலரிலுறை
கலைமகளும், ‘மா’ என்று சொல்லப்படுவாள் தேனூறு செந்தாமரை மலரின்
கண் விளங்கும் திருமகளும் ஆவர். இவர் இருவரும் கரிய மேகத்தொடும்
பகை பட்டு நிற்கின்ற கரிய கூந்தலையுடைய உமையம்மையாரின்
விழிக்கோடியில் தோற்றுதலாலும் ஏற்றமுறும் அத்திருப்பெயரை எமது
முதல்விக்கு மிகுத்துக் கூறுவர் மெய்யுணர்ந்தோர்.

     விந்துவின் வயங்கி அம்பைவீற் றிருக்கும் வியன்திருச் சக்கர
வடிவாம், அந்தவான் பிலந்தான் இயம்பிய காமம் அனைத்திற்கும்
ஆதர மாகிப், பந்தமில்காமக் கோட்டம்என் றொருபேர் பரித்திடும்
மற்றெவற் றினுக்கும், முந்திய பீடம் ஆதலின் ஆதிபீடமும்
மொழிந்திடப் படுமால்.                                    40