எமது பெருமாட்டியார் பெருங்கருணை மீக்கூர்ந்து ‘தோடுகள் விரிந்த மலர்த் தவிசில் வீற்றிருக்கும் திருவே! நடுக்கங்கொள்ளாதே. உனது உடலிடத்துக் கருமை கரிய சாந்தாகக் கழிவதாக. முன்னையினும் விரும்புகின்ற நல்வடிவினைப் பெறுதி. இன்னே திருமாலுக்கு மிகுதியும் உரியவளாக ஆவாய். அடங்காது கச்சினைக் கிழித்தெழுந்து ஓங்கி நிமிர்ந்து மதர்த்துத் திரண்ட அழகிய முலையினையுடைய மயிலே! இலக்கிய அழகு: (27ஆம் செய்யுளிலும் காண்க) அழகுவாய்ந்தநின் வடிவினிற் கழியும் அனைய சாந்தணி நுதலினர் தமக்கு, விழவும் இன்பமுஞ் செல்வமும் புகழும் மேகல் இன்மையும் இகழுமற் றொழிக, பழைய வேதமுற் றுணர்ந்துயர் சிறப்பிற் பனுவ லாட்டியும் இவண்அமர் செயலாற், கழிவில் அன்பின்நீ வேட்டவா றெனக்குக் காமக் கண்ணியாம் பெயர்உ றுகென்ன. 47 ‘அழகிய நின் வடிவினின்று கழியும் அச்சாந்தினை அணியும் மகளிர்க்கு மங்கலமும், இன்பமும், செல்வமும், புகழும் அழகிய இவைமேவுக. வறுமையும், பழியும் ஏனையவும், நீங்குக. பழைய வேதங்களை முற்றவும் உணர்ந்துயர்ந்த சிறப்பினையுடைய சரசுவதியும் இங்கு வீற்றிருத்தலால் நீங்காத அன்பின் நீ விரும்பியவாறு எனக்குக் காமக் கண்ணி என்னும் பெயர் உறுக’ என்றருளி, இறைவி திருமாலுக்குக் கட்டளையிடுதல் இனைய வாறிவண் நிகழ்வுழிச் சுரும்பர் இமிருந் தாமரை உந்தியங் கடவுள், மனைய கத்துமா மடந்தையைக் காணான் மனமழுங்கினன் பிரிவுநோய் வருத்தக், கனைக டற்பரப் பெங்கணுந் தேடிக் காஞ்சி மாநகர் ஆவயின் கண்டான், அனைய தாரமும் இறைவியும் தம்முள் அறைவ கேட்டவண் ஒளித்து நின்றனனால். 48 இங்கு இங்ஙனம் செயல்கள் நிகழ்கையில் பதுமநாபன் என்னும் திருமால் அந்தப்புரத்தில் திருமகளைக் காணாராய் மனம் வருந்திப் பிரிவுத் துன்பம் மேலும் வருத்துதலால் ஒலிக்கின்ற கடலுலகில் எவ்விடத்தும் தேடிக்காணாது காஞ்சிமா நகர்க்கண் கண்டனர். வாழ்க்கைத் துணைவியும் இறைவியாரும் தமக்குள்ளே நிகழும் வேண்டுகோளும், வரப்பிரசாதமும் ஆகிய திருவாக்குகளை மறைந்து நின்று கேட்டனர், ஒள்வ ளைக்கரத் திருவரும் அவனை உணர்ந்து நோக்கினர் என்னைஆ ளுடையாள், கள்வன் ஒத்திவண் நிற்பவன் யாரே எனக்க டாயினள் கடிமலர் அணங்கும், வெள்க லுற்றுமுன் இறைஞ்சினள் மாயோன் விரைவின் அம்பிகை திருவடி வணங்கி, உள்ள கம்பெரு மகிழ்ச்சியின் திளைப்ப ஒரும ருங்குற ஒடுங்கிநின் றனனே. 49 |