வள்ள லேமலர்த் திருவிளை யாடுமார்ப னேபெரும் பசிஎனை வருத்த, உள்ளு டைந்துளேன் ஆண்டுதோ றடியேற் கொரும கன்றனை உயிரொடும் உதவின், கொள்ளும் அப்பலி ஏற்றுளம் மகிழ்வேன் கொடுத்தி இவ்வரம் எனக்கென அரவப், பள்ளி யோனும்அற் றாகென விளம்பிப் பத்தர் போற்றஅத் தலத்தினி திருந்தான். 53 ‘வள்ளலே! மலரிலுறை திருமகள் திளைக்கு மார்பனே! பெரிய பசி நோய் என்னை வருத்துதலான் உள்ளம் உடைந்துளேன். அடியேனுக்கு ஆண்டுதோறும் ஒருவனை உயிரோடும் கொடுத்தால் அப்பலியை ஏற்றுக்கொண்டு மனமகிழ்வேன். இதனையே வேண்டுகின்றேன்’ என்னலும், பாம்பணையோனும் ‘அவ்வாறு பெறுக’ என அருளி அன்பர் தன்னைப் போற்ற அத்தலத்தில் இனிது வீற்றிருந்தனன். கள்வன் நின்றவன் இருந்தவன் கிடந்தோன் என்னும் நால் வகைக் கரிசறு வடிவால், வெள்வ ளைக்கரக் கடவுள்அங் கமர்ந்துதான் விமல நாயகி ஆணையின் ஆற்றான், முள்ளெ யிற்றராப் பணம்புரை அல்குல் முளரி மாதும்அப் பிலத்தயல் இருந்தாள், புள்ளு யர்த்தவற் கினியவாம் அங்கட் போற்றப் பெற்றவர் வைகுந்தம் புகுவார். 54 ‘கள்வன்’ எனவும் ‘நின்றவன்’ எனவும், ‘இருந்தவன்’ எனவும், ‘கிடந்தவன்’ எனவும், நான்கு திருப்பெயர்களுடன் நால்வகைக்குற்றமற்ற வடிவங்களுடன் வெள்ளிய பாஞ்ச சன்னியத்தைத் திருக்கரங்கொண்ட பிரானார் அங்கே அமர்ந்தனர். விமலநாயகியாகிய காமக்கண்ணியின் ஆணைப்படி பாம்பினது படம்போலும் அல்குலையுடைய திருமகளும் அப்பிலத்தயலே இருந்தனள். கருடக்கொடியினர்க்கு இனிய ஆகும் அவ்விடங்களிற் போற்றுதலைப் புரிந்தோர் வைகுந்தத்தை எய்துவர். கறைமி டற்றிறை வைகும்வீ ராட்ட காச மேன்மையின் தொடர்ச்சியால் இங்கே, அறைக ழல்திரு நாயகன் வரலா றனைத்துங் கூறினாம் அத்திரு நகரை, நிறைவி ருப்பினால், வழிபடப் பெறுவோர் நிலமி சைப்பெரு வாழ்வின ராகிப், பிறைமுடிப்பிரான் திருவடிக் கலப்பிற் பெறல ரும்பர போகமுற் றிருப்பார். 55 திருநீலகண்டர் வீற்றிருக்கும் வீராட்ட காசர் வரலாற்றின் தொடர்பினால் இவ்வரலாற்றில் வீரக்கழலணிந்த திருமகள் நாயகனார் வரலாறு முற்றவும் கூறினோம். அவ்வீராட்டகாசப் பிரானாரை நிறைந்த விருப்புடன் வழிபாடு செய்வோர் நிலத்தின்மேற் பெருவாழ்வுடையராகிப் பிறையை அணிந்த பெருமானார் திருவருட் கலப்பினாற் பெறற்கரிய பேரின்பம் எய்தி இன்புறுவர். வீராட்டகாசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-1746 |