திருநகரப் படலம் அறுசீரடி யாசிரிய விருத்தம், கச்சிமா நகர்ஓர் தட்டுங் கடவுளர் உலகோர் தட்டும் வைச்சுமுன் அயனார் தூக்க மற்றது மீது செல்ல நிச்சயம் முறுகித் தாழ்ந்து நிலமிசை விழும்இவ் வூரை இச்சகத் தூர்க ளோடும் எண்ணுதல் மடமைப் பாற்றே. 1 | பிரமன், பெருமை அமைந்த கச்சி நகரைத் துலையின் ஓர் தட்டிலும், தேவருலகைப் பிறிதொரு தட்டிலும், வைத்து முன்னோர்கால் தூக்கிப் பார்க்க அவ்விண்ணுலகு கனமின்மையால் மேலே செல்லும்படி, மிகத் தாழ்ந்து நில மேல் விழும் இவ்வூரை இவ்வுலகில் உள்ள நகரங்களொடும் வைத்து எண்ணப்புகுதலும் அறியாமையின் பாலது. அயன், பிறவாதவன் என்பது பொருள். முன், எனவே அறிந்த பின் எண்ணுதலும் நிச்சயம் மடமைப்பாலது. அயோத்தி, மதுரை, மாயை என எண்ணுதல். சகம்-அழிவது; ‘ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே, மாறிலாதிருந்திடு வளங்கொள் காஞ்சி’ என்பது கருத்து. கவினெலாந் திரட்டிக் காஞ்சிக் கடிநக ராக்கிக் கஞ்சத் தவிசினோன் அதன்பால் நுட்பத் தொழில்செயச் சார்ந்த காலைப் புவியிடைக் கழிந்த சேடம் பொற்பவே றெடுத்து விண்ணா டவிர்தரச் செய்தான் போலும் அன்றிவே றுரைப்ப தென்னோ. 2 | தாமரை மலரை இருக்கையாகவுடைய பிரமன், எவ்வயின் அழகையும் ஒன்று கூட்டிக் காவலைக் கொண்ட காஞ்சி நகராக்கி, நுட்பத்தொழிலில் புவியிடை உதிர்ந்த எஞ்சிய அழகால் ஆக்கப் பெற்றதே விண்ணுலகெனலாம் போலும், அன்றி வேறுரைப்பதெவனுளது. ஆதிநாள் முக்கண் எம்மான் அயன்றனைப் படைத்து வேதம் ஓதுவித் தருளின் நோக்கி உலகெலாம் படையென் றேவும் போதிது பார்த்திவ் வாறு படையெனப் புகன்று வைத்தான் ஈதென லாகுங் காஞ்சி என்னுரை யளவைத் தாமே. 3 | சிவபெருமானார் படைப்புக்காலத்தில் பிரமனைப் படைத்து, அறிவு நூல் கொளுத்தி, அருட் பார்வை வைத்துக், காஞ்சிபுரத்தைச் சிருட்டி செய்து ‘இதுபோலப் படைப்பாய் ஆக’ என்றருளினர். ஆகலின், பிரமன் படைப்பினைக் கடந்த இத்தலத்தின் பெருமை என்னுரை அளவையின் அடங்குமோ? இந்நகர் நோக்குந் தோறும் இமையவர் தமது நாடு நன்னரென் றிருந்த தம்மைத் தாங்களே நாணி வைவர் முன்னொரு சமயந் தன்னைப் பொருளென முற்றி நின்றோர் பின்னர்வான் சைவம் எய்தப் பெறின் அவர் பேசு மாபோல். 4 | |