திருநகரப் படலம் 53


     தேவர் காஞ்சியைக் காணுந்தொறும், காணுந்தொறும் தம்
பொன்னுலகையே பெரிதென மதித்தமைக்கு நாணுவர்; தம் அறிவை இகழ்வர்.
முன் ஒரு சமயத்தைப் பொருளாகப் போற்றி உறைத்து நின்றோர் பின்னர்
உண்மையாகிய சைவ சமயத்தை, முன்னைச் சிவபுண்ணியத்தால் எய்தப்பெறின்
கடைப்பிடித்த சமயத்தையும் தம்மையும் வெறுத்துக் கொள்ளுதல் போல.

     திருநாவுக்கரசு நாயனார் திருமுறைகளை ஓதுவோர் இவ்வுண்மையை
உணரலாம். ‘பெறின்’ என்பது பெறலருமை குறித்து நின்றது. நன்னர்-(நன்மை)
நன்மை உடையதனை நன்மை என்றார். ‘தகுதியுடையதனைத் தகுதி’ (திருக்-
111) என்றாற்போல.

நீடும்இந் நகரம் மன்னி நெடுந்தவம் முயல்வோர் வான
நாடர்தம் பதமுங் கஞ்சன் நாரணன் வலாரி வைப்பும்
பாடிரி கான்ற சோறாக் காண்பதிப் பதியின் வண்மை
கோடியில் ஒருகூ றொவ்வா அவையெனக் குறித்தே யன்றே.   5

     நிலைபெறும் இந்நகரில் நிலைபெற்றுப் பெரிய தவத்தினை முயல்வோர்
ஏனையராகிய வானோர் உலகையும் (தாமரையோன்) பிரமன், மால், இந்திரன்
இன்னோர் பெரும்பதங்களையும் பெருமை திரிந்த உண்டுமிழ்ந்த சோறு
போல  மதிப்பதற்குக் காரணம் இப்பதியின் வளமையில் கோடியில் ஒருகூறும்
ஒப்பாகா அவைஎனக் கருதியே ஆகும்.

புறநகர் சோலை

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     சுரும்புகால் உழக்க முகையுடைந் தலர்ந்து துளித்ததீஞ்
சுவைமதுப் பிலிற்றும், அரும்பெறற் சோலை மீமிசைக் கருவி
முகிற்குழாம் அடர்வபாட் டளிக்கு, விரும்புதேன் அளியாக் கற்பக
நாட்டை வெல்லுவான் வருவதோர்ந் தஞ்சித், தரும்புகழ் வலாரி
ஊர்தியைச் செலுத்தித் தடுத்திடை மடக்குதல் மானும்.        6

     வண்டுகள் காலால் மிதிக்க அரும்புகள் முருக்கு உடைபட்டு மலர்ந்து
இனிய தேனைச் சிந்தும் சோலைமேல் தொகுதியையுடைய மேகக் கூட்டம்
நெருங்குதல், யாவரும் விரும்பும் பாட்டிசை கேட்டு வண்டிற்குத் தேனைச்
சொரிந்த கற்பகச் சோலை அடுத்த விண்ணுலகை வெல்ல வருவதறிந்து
அஞ்சி இந்திரன் தனக்கு வாகனமாகிய மேகத்தைச் செலுத்தி இடையே
தடுத்து மடக்குதலை ஒக்கும்.

     கருவி-மின்னு, முழக்கு முதலிய தொகுதி. மேக மண்டிலத் தணவுஞ்
சோலையும், கற்பக மரத்தில் வண்டு மொய்யாமையும் பெறப்பட்டன.

     நறவம்ஊற் றெடுப்பச் சிறகர்வண் டிமிரும் நளிபொழில்
இடும்பைகூர்ந் தழகு, குறைபடப் பொதிந்த குயின்களை வல்லே
குதித்தெழுந் துதைத்துதைத் தகற்றி, நிறைபுனல் தடத்துப் பிறழ்தருங்
கிழமை நெட்டிள வாளைமீன் றனக்குத், துறைதொறுங் கைம்மா
றெனக்கனிசெழுந்தேன் சொரிவன நெடுமரப்பொதும்பர்.          7