திருநந்திதேவர் வாக்கையும், தேவர் முனிவரர் தம் மனத்துன்பத்தையும் திருவுள்ளத்திற் கொண்டு கயிலாயபதி கருணைமீக் கூர்ந்து மயில்கள் ஆடும் மலையரையன் மகளாருடன் புத்திரவாஞ்சை யால் கந்தலோகத்தை எய்த வேற்படைப் பிரானார் எதிரில் விரைந்து போய் அடியிணைகளிற் பணிந்து நின்றனர். அனையானை இருவர்களும் மடித்தலமீ திருத்திமகிழ்ந் தன்பு கூரக், கனிவாயின் முத்தங்கொண் டுச்சிமோந் தகங்கனியத் தழீஇய பின்னர், எனையாளுஞ் சிவபெருமான் குறுமூரல் எழில்காட்டி மேனி தைவந், துனைஓரா வேதியனைச் சிறைவிடுத்தி மைந்தாஎன் றுரைத்துப் பின்னும். 21 அத் தன்மையரை இருமுது குரவரும் மடிமிசை இருத்தி மகிழ்ந்து பேரன்பு வெளிப்படக் கொவ்வைக் கனியை ஒக்கும் வாய்முத்தம்உண்டு உச்சியைமோந்து உள்ளம் நெகிழ அணைத்தபின்னர் என்னை அடிமை கொள்ளும் சிவபிரானார் புன்முறுவல் பூத்துத் திருமேனியைத் தடவிக் கொடுத்து ‘மைந்தனே! உனது தன்மையை அறிந்து கொள்ளும் வலியில்லாத பிரமனைச் சிறையினின்றும் விடுதலைசெய்’ எனத் திருவாய் மலர்ந்து மேலும், முருகக் கடவுள் காஞ்சியை அடைதல் நம்மாணை கடந்தனையால் அன்னதற்குக் கழுவாய்நீ நயத்தல் வேண்டும், வெம்மாயம் அணுகரிய திருக்காஞ்சி நகர்வரைப்பின் மேவி அன்பின், அம்மாடே சேனாப தீச்சரம்என் றோர்இலிங்கம் அருச்சித் தேத்திக், கைம்மாணத் தவம்புரிதி என்றருளக் கேட்டெழுந்தான் கடப்பந் தாரான். 22 ‘நம்முடைய கட்டளையை நிறைவேற்றாமையால் உண்டாகிய குற்றத்திற்குத் தீர்வு விரும்பி மேற்கொள்ள வேண்டும். கொடிய வஞ்சனைகள் நெருங்காமைக்கு இடனாகிய திருக் காஞ்சியைச் சேர்ந்து அவ்விடத்தே அன்பினால் சேனாபதீச்சரப் பிரானாரை நிறுவிப் பூசனையைப் புரிந்து ஒழுக்கம் மாட்சிமைப்படத் தவத்தைச் செய்’ என்றருளக் கடப்ப மலர் மாலையை அணிந்த முருகப்பிரானார் இசைவு பெற்றெழுந்தனர். திசைமுகனைக் கணங்களாற் சிவபெருமான் திருமுன்னர்ச் செலுத்தி உள்ளப், பசையின் இரு முதுகுரவர் அடிவணங்கி விடைகொண்டு பழனக் காஞ்சி, வசைகடந்த நகர்எய்தி உலகாணித் தடமேல்சார் மாகா ளப்பால், இசைவிளங்கு தேவசே னாபதீச் சரஇலிங்கம் இருத்திப் போற்றி 23 பிரமனைச் சிறைவீடு செய்து சிவபிரானார் திருமுன்பு போக்கி விருப்புடன் தாய் தந்தையர் திருவடிகளிற் பணிந்து விடைகொண்டு புகழ் |