படைத்த காஞ்சியை எய்தி உலகாணித் தீர்த்தத்திற்கு மேற்றிசையில் மாகாளேசத்திற்கு அயலே புகழின் விளங்கு தேவசேனாபதீச்சர இலிங்கத்தைத் தாபித்துப் போற்றுதலைப் புரிந்து, புள்ளிமான் தோல்உடுக்கை முஞ்சிநாண் அரைப்பொலிய அக்கமாலை, தெள்ளுநீர்க் குண்டிகையுங் கரத்தொளிரத் திருக்குமர கோட்டம் என்னும், உள்ளியோர் பிறப்பறுக்கும் ஆச்சிரமத் தினிதிருந்தான் உறுவர் போற்ற, வள்ளியார் இணைக்களப மணிக்கலச முலைதிளைக்கும் வாகைத் தோளான். 24 வள்ளியம்மையார் தோளைத் தோயும் போக மூர்த்தியாம் வெற்றி மாலைசூடிய முருகப்பிரானார் புள்ளிகளையுடைய மான்தோல் உடையாகவும் தருப்பையான் ஆகிய கயிறு அரைநாணாகவும் அமைந்து இடையிற் பொலியவும், உருத்திராக்க வடமும், தெள்ளிய நீரையுடைய கமண்டலமும் திருக்கைகளில் விளங்கவும், ‘குமரகோட்டம்’ என்னப்பெறும் நினைத்தவர் பிறப்பறுதற்கு ஏதுவாகிய தவச்சாலையுள் முனிவரர் சூழ்ந்து போற்ற இனி திருந்தனர். பிரமனைச் சிறையிட்டுப் படைத்தற் றொழிலைச் செய்த இப்பிரமசரிய கோலத்துடனே குமரகோட்டத்தில் எழுந்தருளியுள்ளனர். குருமணிகள் வெயில்எறிப்பக் குயிற்றுநீள் மதிற்குமர கோட்டம் ஓர்கால், திருவிழியிற் காண்டல்பெறின் கடையோரும் எழுபிறப்பின் மறையோ ராவர், திருமறையோர் முதலானோர் தொழுதிறைஞ்சப் பெறுகிற்பின் தேவர் தேறாப், பொருள்நிலைமை தெளிந்தின்பப் பெருவீட்டிற் பரபோகம் திளைத்து வாழ்வார். 25 நிறமுடைய மணிகள் ஒளிவிடுமாறு பதிக்கப்பெற்று நீண்டமதிலை யுடைய திருக்குமரகோட்டம் என்னும் தலத்தை ஓர்முறை இருவிழிகளாலும் காணப் பெற்றாலும் கடைக் குலத்தோரும் ஏழு பிறப்பினில் அந்தணராய்ப் பிறப்பர். வேதியர்முதலாம் வருணத்தோர் தொழுது துதிப்பராயின் தேவர்க்கும் தெளியலாகாத உண்மைப் பொருளின் நிலைமையைத் தெளிந்து வீடுபேற்றினை எய்திப் பரபோகமாகிய பேரின்பத்தில் மூழ்கி வாழ்வர். கறங்கருவிப் பொலங்குடுமி வரைகிழித்த நெட்டிலைவேற் கடவுள் போற்றப், பிறங்கியஇத் தேவசே னாபதீச் சரமுதலைப் பொற்பின் ஏத்தி, மறங்குலவுஞ் சுடராழி வலன்ஏந்து மால்உருகும் உள்ளத் தானென், றறங்கரைவார் எடுத்துரைக்கும் ஒருதிருப்பேர் பெற்றான்அம் முறையுஞ் சொல்வாம். 26 |