கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேலவர் தாபித்துப் போற்ற விளங்கிய இத் தேவசேனாபதீச்சரப் பெருமானை விருப்பொடும் துதி செய்து வீரம் திகழும் சுடரையுடைய சக்கரத்தை வலத்தில் ஏந்திய திருமால் ‘உருகும் உள்ளத்தவர்’ என்று அறமுதற் பொருள்களை உலகிற்கு உணர்த்தும் அந்தணர்கூறும் ஒப்பற்ற திருப்பெயர் பெற்றனர். அவ்வரலாற்றையும் கூறுவோம். மாப்பேருழி கலிநிலைத் துறை முள்ள ரைச்செழுந் தாள்மலர் முளரிவீற் றிருக்கும் வள்ளல் கற்பம்ஒன் றிறுதலும் யாவையும் மலங்கப் பொள் ளெனப்பரந் துலகெலாம் விழுங்கியபுணரி வெள்ள நீர்மிசை மிதந்தனன் மார்க்கண்டி மேலோன். 27 | முட்களையுடைய தாமரை மலரில்இருக்கும் பிரமகற்பம் ஒன்று தோன்றுதலும் யாவும் அழியுமாறு விரைந்து பரவி உலகைமுற்றவும் மூடிக்கொண்ட கடல்நீர்ப் பெருக்கின்மேல் மார்க்கண்டேயர் மிதந்தனர். தனிய னாகிவெஞ் சலதியின் உழிதரும் தகைசால் புனித மாதவன் ஆயிடைப் பொறிஅராத் தவிசின் இனிது கண்வளர் மாயனைக் கண்டுசென் றிறைஞ்சி நனிம கிழ்ச்சிமீக் கிளர்ந்தெழு மனத்தொடு நவில்வான். 28 | துணையின்றித் தனியனாய்க் கொடியநீர்ப் பரப்பில் உழலும் தகுதி நிரம்பிய தூய பெரும் தவத்தவன் அவ்விடத்தில் புள்ளிகளையுடைய ஆதிசேடனாகிய பாயலில் இனிதே அறிதுயில் செய்யும் திருமாலைக் கண்டு நெருங்கி வணங்கிப் பெருமகிழ்ச்சி மேற்பொங்கியெழும் உள்ளம் உடையவராய்க் கூறுவர். நகைம லர்த்துழாய் நாயக ஞாலம்மற் றெவையும் இகல்செய் வெங்கதிர்ச் சண்டமாப் பரிதிநின் றெரிப்பத் துகள்ப டுஞ்செயல் கண்டயான் அத்துணைப் பொழுதின் இகழ ருந்திறல் அறிவுபோய் எய்தினன் மயக்கம். 29 | அவிழ்ந்த துழாய் மலர்மாலையை அணிந்தநாயகனே! உலகினும் பிற இடங்களினும் ஒளியைச் செய்கின்ற சூரியன் கொடுங் கிரணங்களைப் பரப்பி மீண்டும் வேகமும், கொடுமையும் உடைய யுகாந்தகாலச் சூரியனாய்நின்று எரித்தலான் நீறுபட்ட செயலைக் கண்ட யான் அப்பொழுதில் புகழ்தற்குரிய வலியுடைய அறிவும் திரிந்து மயக்கம் அடைந்தேன். சண்டமாப் பரிதி தக்கேசப்படலம் 35ஆம் செய்யுளிற் காண்க, |