ஏய்ந்த மையல்தீர்ந் திதுபொழு துணர்ச்சிவந் தெழுந்தேன் காந்து வெம்புனற் கடுந்திரைப் பரப்பிடை மிதந்து நீந்தி நீந்திஎன் நெடியகால் கரங்களும் மெலிந்தே ஏய்ந்த நல்வினை இருந்தவா றுனைஇவண் கண்டேன். 30 | ‘மேவிய மயக்கம் நீங்கி இப்பொழுது தெளிந்தேன். சுடுகின்ற வெம்மையையுடைய நீரிற் சண்டவாயுவால் எழுப்பப்படும் பெருந்திரை வெள்ளத்தில் மிதந்து நீந்தி நீந்திக் கால்களும் கைகளும் மெலிந்தன. முன்னர்ச் செய்த நல்வினை பயன் கைகொடுத்தமையால் இங்கு உன்னைக் கண்டேன்’. நிலம டக்கொடி வனமுலை திளைக்கும்நீள் மார்ப உலகம் எங்கணும் கருகிருள் மூடிய துரவோய் இலகு பேரொளி இருசுடர் யாங்ஙனம் போய குலவும் ஏனைய கோளொடு நாள்கள்எங் கிறந்த. 31 | ‘பூமி தேவிக்கு நாயகனே! உலகமுழுவதையும் பேரிருள் விழுங்கியது. அறிவுடையோனே! விளங்குகின்ற பேரொளியை விரிக்கின்ற சந்திர சூரியர் என்பட்டனர். நவகோள்களும் நட்சத்திரங்களும் பிறவும் எங்குக் குடிபோயின. சகமி சைப்பயில் பொருளெலாம் எவ்வுழிச் சார்ந்த திகழ நீஎனக் கிவையெலாந் தெரித்திஎன் றிரப்ப நிகழும் மாதவன் மாதவன் றன்னைநேர் நோக்கி அகலி டத்துள பொருளெலாம் என்அகட் டுளவால். 32 | ‘உலகிற் கிடந்த பொருள்கள் யாவும் எங்கு இடம் பெற்றன. இவை முற்றவும் விளங்க எனக்கு உணர்த்துதி’ என்று குறையிரப்ப விளங்கும் திருமகள் நாயகனார் மார்க்கண்டேயரை எதிர்நோக்கிப் பரவிய உலகப் பொருள்கள் எல்லாமும் என் வயிற்றிடை உள்ளன. மார்க்கண்டேயர் மாயனை முனிதல் புகுந்து நோக்குதி என்றலும் முனிவரன் புகல்வான் முகுந்த முன்ஒரு கற்பத்திம் மொழியினா லன்றே மிகுந்த வஞ்சனைப் படுத்தனை விளைமதுப் பிலிற்றி நகுந்த டம்பொகுட் டம்புய வாழ்க்கைநான் முகனை. 33 | ‘உட்புகுந்து காணுதி’ என்னலும், மார்க்கண்டேயர் கூறுவார். ‘முகுந்தனே! முன்னம் ஓர் பிரளய காலத்தில் இவ்வஞ்சக மொழியினா லல்லவோ செவ்வித்தேனைச் சிந்தும் தாமரை மலரவனை மிக்கதோர் வஞ்சக வலையில் அகப்படுத்தனை.’ ஓர் கற்பத்திற் பிரமன் திருமாலின் வாய் வழிப்புகுந்து வழிபெறாது வருந்தி உந்தி வழி வெளிவந்தனன். |