538காஞ்சிப் புராணம்


முனைக டந்தவேல் மணிமுடி அம்பரீ டன்றன்
மனையில் நாரதப் பருப்பத முனிவரை வஞ்சித்
தனைய மன்னவன் புதல்வியைக் கவர்ந்துகொண் டகன்றாய்
இனைய மாவலி தனக்குமுன் வஞ்சனை இழைத்தாய்.    34

     ‘பகைவரை வென்றடக்கிய வேலும் மணிமுடியும் தாங்கிய
அம்பரீடனிடத்து நாரதர் பருப்பத முனிவர் இருவரையும் வஞ்சித்து
அம்மன்னவன் புதல்வியைக் கைக்கொண்டு போனாய். மாவலி வருந்த
வஞ்சகம் புரிந்தனை.’ அம்பரீடன் மகளைத் தாம் தாம் மணக்க விரும்பிய
நாரதர் பருப்பதருக்குக் குரங்கு முகமும், பருப்பதர் நாரதருக்குக் கிழமுகமும்
உண்டாகத் திருமாலிடம் வரம் பெற்று அரசன் மகள் முன்னர் அவ்வாறு
மாறுகையில் கதுமெனத் திருமால் தோன்றி மணமாலை தமக்குச் சூட்டப்
பெற்றனர்.

இன்ன வாறுனை நம்புநர் அடியவ ரிடத்தும்
துன்னு மாயமே செய்வதுன் தொழிலெனக் கண்டேன்
நின்னை அஞ்சுகேன் நெறிக்கொடு செல்வன்என் றியம்பி
அன்ன நீரினைக் கரங்கொடு நீந்திஅங் ககன்றான்.    35

     ‘உன்னை நம்புவோரிடத்தும், அடியவரிடத்தும் இவ்வாறு செறிந்த
வஞ்சனையே! செய்வ துன் தொழிலென அறிந்தேன். நின்னை
வெருவுகின்றேன். ஆகலின், வழிக்கொடு போவேன்’ என்று கூறி நீரினைக்
கையால் நீந்தி அங்கு நின்றும் அகன்றனர்.

மார்க்கண்டேயர் காஞ்சியை யடைதல்

அறுசீரடியாசிரிய விருத்தம்

செல்லும் எல்லை நீர்மிசைத் தோன்றும் வேத மாஞ்சினைப்
பல்ல வங்கள் கண்டவை பற்றி உள்இ ழிந்தனன்
ஒல்லை அங்கண் நோக்கினான் ஒளிப்பி ழம்பின் நீடிய
மல்லல் அம்பொன் இஞ்சிசூழ் மாடக் காஞ்சி மாநகர்.   36

     மேற்செல்கையில் நீர்மேற் புலப்படும் வேதமாமரத்தின் கிளையிடைத்
தளிர்களைக் கண்ட வற்றைப் பற்றி உள்ளே மார்க்கண்டேயர் இறங்கினர்.
ஒளித்திரட்சியினால் நீண்ட வளமுடைய அழகிய பொன்னாலியன்ற மதில்
சூழ்ந்த மாடங்களைக்கொண்ட காஞ்சி மாநகரை விரைவில் அங்குக்
கண்டனர்.

எற்று தெண்டி ரைப்புனல் இஞ்சி யின்வ ளைப்பவெண்
புற்பு தத்தின் உள்வெளிப் பொற்பெ னத்தி கழ்ந்துநீள்
ஒற்றை மாவி னார்அரு ளொளிது ளும்ப மன்னும்ஊர்
அற்பு தத்தை நோக்குதோ றற்பு தத்த னாயினான்    37