குமரகோட்டப் படலம் 539


     திரைக்கரங்களால் எற்றுகின்ற தெள்ளிய புனலை மதில் உட்புகாது
சூழ்ந்து காத்தலின்நீர்க்குமிழியின் உள்ளிடு வெளிபோலப் பொலிவொடு
திகழ்ந்து நீண்ட ஒற்றை மாமரத்தடியில் எழுந்தருளியுள்ள திருவேகம்பர்
திருவருள் விளக்கம் ததும்ப அழிவின்றி நிலைபெறும் ஊர் விம்மிதத்தை
எண்ணுந்தொறும் விம்மிதம் உடையராயினர்.

     அற்புதம், சலப்பிரளயத்தில் அழியாமை.

அங்கண் எய்ப்பு நீத்தபின் அண்ணல் நம்ப வாணண
உங்கண் எய்தி அர்ச்சனை உஞற்றி அவ்வி ராவெலாந்
துங்க மாவின் நீழல்வாழ் சோதி முன்னர் வைகினான்
சங்கம் ஆழி ஏந்தியோன் றானுந் தொடர நண்ணினான்.    38

     மேலும், அம்முனிவர் அங்கு இளைப்பாறிய பின்னர்த் தலைவராகிய
திருவேகம்ப நாதரை ஆங்கெய்தி அருச்சனை புரிந்து அப்பிரளய இரவு
முழுவதும் தூய வேதமாமரத்தின் அருள் நிழலில் எழுந்தருளியுள்ள
பேரொளிப் பெருமான் திருமுன்னர் இருந்தனர். சங்கு சக்கரங்களைத்
தாங்கிய திருமாலும் தொடர்ந்து நண்ணினார்.

திருமால் வரம்பெறுதல்

நண்ணும் நெறியிற் காஞ்சிமா நகரம் எய்தி அந்நகர்
வண்ணம் முற்றும் அற்புதம் மருவ நோக்கி மாநிழல்
அண்ண லாரை ஏத்திஅம் முனிவன் சொன்ன யாவையும்
எண்ணி எண்ணி நெஞ்சுளைந் தென்நி னைந்த வாறெனா.   39

     போம்வழியிற் காஞ்சியை எய்தி அந்நகரில் உள்ள அழகிய
விம்மிதங்கள் அனைத்தினையும் ஊன்றி நோக்கி மாவடியில் எழுந்தருளி
யுள்ள திருவேகம்பநாதரைப் போற்றி மார்க்கண்டேயர் இகழ்ந்துரைத்தன
பலவற்றையும் பலமுறையும் எண்ணி மனம் அழிந்து ‘என் நினைந்தேன்!
என்செய்தேன்!!’ என்று வருந்தி,

சேர்ந்த வர்க்கு வஞ்சமே நாள்தொ றுஞ்செய் கின்றனேன்
வார்ந்த கூந்தல் அம்பிகை மாயை யின்ம யங்கினேன்
நேர்ந்த மாயம் நீக்குமா நீள்வ ரைப்பி ராட்டிதாள்
சார்ந்து போற்று வேனெனத் தனிப்பி லத்தை நண்ணினான்.   40

     ‘அடுத்தவர்க்கு வஞ்சகச் செயலையே செய்கின்றேன் அம்மையாரால்
தொழிற்படும் மாயையிற்பட்டு மயங்கினேன். தொடக்குண்ட மாயையை
வெல்லும் பொருட்டு மலைமகளாருடைய திருவடிகளைப் போற்றுவேன்’ என்
றுறுதி பூண்டு ஒப்பற்ற காமக் கோட்டத்தில் உள்ள பிலத்தை நெருங்கினர்.