நெட்டிலைக் கதலித் தண்டெனச் சேர்ந்து செறிந்துநீள் விலைவரம் பிகந்த, வட்டொளி அரத்தம் நுழைஇழைக் கலிங்க மணிகெழு வளம்பயில் குறங்கைக், கட்டெழில் மதவேள் ஊதுகா களமும் கணைபொதி ஆவநா ழிகையும், பெட்டவர் மருள வீற்றிருந்தனைய பிதிரொளிப் பொற்கணைக் காலை. 16 நீண்ட இலையையுடைய வாழைத் தண்டினைப் போலச் சேர்ந்து நெருங்கிப் பெருவிலையின் எல்லையையும் கடந்த உருக்கி ஒளியையுடைய அரக்கினது நிறங்கொண்ட நுண்ணிய நூலாற் செய்த புடைவை அழகு பொருந்துதற்குக் காரணமாகிய வளமுறும் துடையையும், பேரெழிலையுடைய மன்மதனுடைய ஊதுகொம்பும், அம்புகளைப் பெய்த அம்புக்கூடும் என விரும்பியவர் மருளுமாறு வீற்றிருந்தாலனைய சிதறிய ஒளியையுடைய அழகிய கணைக்காலையும், ‘‘அட்டொளி அரத்தம்” எனவும், ‘உருக்கி ஒளியையுடைய’ எனவும் வரும் அதனுரையையும் நோக்குக (சீவக. 98 நச்சி.) ‘‘நுழை நூற்லிங்கம்” (மலைபடுகடாம்-561) கறுத்தவாள் முகனை வெரீஇப்பதம் பணியுங் கலைமதி வெள்ளுகிர் மதநூல், பொறித்தபுத் தகமாம் புறவடி அன்னமென்னடைப் பூந்தளிர் அடியைக், குறித்துரை உவமைக் கிடம்பெறா தள்ளிக் கொளத்தகும் பேரழ கமைந்த, மறுத்தபூ மேனி இளநலங் கனிந்து மணிநிறம் வயங்குகோ மளத்தை. 17 கோபித்த ஒளியுள்ள முகத்தை அஞ்சித் தன் அடிகளை வணங்கும் சந்திரனை ஒக்கும் வெள்ளிய நகத்தையும், காம நூலெழுதிய புத்தகத்தை ஒத்த புறவடியினையும், அன்னம் போன்ற மெல்லிய நடையினையும், அழகிய தளிரொக்கும் அடியுனையும் உவமை கூறுதற்குஎண்ணி உரை அளவையில் அடங்காது அள்ளிக் கொள்ளத் தகுந்த பேரழகு வாய்ந்த மணமுடைய மலரை ஒக்கும் மேனியின் இளநலம் மிக்கு மணிநிறம் விளங்குங் கோமள வடிவினையும், திருமால் தேவர்களுக்கு அமுதமளித்தல் கலி விருத்தம் காண்டலும் மாரவேள் கணைக்கி லக்கமாய் மாண்டனர் எனஅறி வழிந்து மையல்நோய் பூண்டனர் தானவர் மடந்தை போல்வரும் ஆண்டகை மாயையால் அவரை வஞ்சித்து. 18 | அசுரர் கண்ட போதே மன்மதனுடைய அம்புபட்டு நொந்து இறந்தவர் என எண்ணுமாறு அறிவழிந்து காம நோய்வாய்ப்பட்டனர். பெண்ணைப்போல வந்த புருடோத்தமன் மாயையால் அவர் தம்மை மயக்கி, |