மாசாத்தன்தளிப் படலம் 547


கடவுளர்க் கமுதெலாங் கடுக ஈந்தவர்
வடிவெடுத் துடனுற வதிஇ ராகுவைத்
தடநெடு மூழையால் அரிந்து தானும்அக்
கடலமிழ் தகுந்துபு களிப்பின் நீடினான்.          19

     தேவர்க்கு அமுத முழுவதும் விரையக்கொடுத்து அத்தேவர் வடிவு
கொண் டுடனிருந்த இராகுவை நீண்ட அகப்பையால் தலையை வெட்டிப்
பின் திருமாலும் அமிழ்தத்தை உண்டு களிப்பு மிக்கனர்.

வேறுகொள் அவுணரை ஞாட்பின் வென்றுபோய்
மாறடும் ஆழியான் இருக்கை மன்னினான்
ஏறணி நெடுங்கொடி எரியின் நீள்சடை
ஆறணி அடிகள்இவ் வனைத்துங் கேட்டரோ.     20

     வேறிருந்த அசுரரைப் போரில் வெற்றி கொண்டு பகையை அழிக்கும்
சக்கரமுடையவர் தம் இருப்பிடத்தை அடைந்தனர். விடைக் கொடியையும்,
எரியை ஒக்கும் சடையிற் கங்கையையும் ஏற்ற பெருமானார் நிகழ்ச்சிகளை
முற்றவும் திருச்செவி ஏற்றருளி,

ஐயனார் அவதாரம்

தன்னடி வழிபடச் சார்ந்த மாயனை
அன்னவை என்னெனக் கடாவி அவ்வுரு
என்னெதிர் காட்டுகென் றியம்பச் சார்ங்கனும்
மன்னிய மலைமகள் தனம் நோக்கியே.          21

     தம்மை வணங்கி அருள் பெறவந்த திருமாலை அந்நிகழ்ச்சியை
வினாவி அப்பெண்ணுருவைத் தம்மெதிரே கொள்ளெனப் பிரானார் கூறச்
சார்ங்கம் என்னும் வில்லுடைய மாலும் உமையம்மையார் திருமுகத்தை
நோக்கி,

மையல்செய் மோகினி வடிவங் காட்டுபு
வெய்தென நடந்தனன் வேளை வென்றகோன்
ஒய்யென எழுந்துசென் றுற்றுப் புல்லவுங்
கையகன் றோடினான் கரிய மேனியான்.         22

     மயக்குறுத்துகின்ற மோகினி வடிவைக் காட்டி விரைய வெளியேறினர்.
காமனை அழித்த கண்ணுதலார் விரைய எழுந்து சென்று தழுவவும்
சாமளமேனியன் கை பிழைத்தோடினன்.

     உலகம் உய்யத் திருவிளையாடல் என்பார் ‘வேளை வென்றகோன்
என்றனர்.