548காஞ்சிப் புராணம்


மறுவலும் எம்பிரான் வலிந்து பற்றிஆங்
கிறுகுறத் தழீஇயினன் இனைய காலையின்
உறுபுகழ்ச் சாத்தன்ஊங் குவர்க்குத் தோன்றினான்
நிறுமுறை உலகெலாம் நிறுத்துங் கோலினான்.      23

     மீட்டும் எமது பெருமானார் இறுகப்பற்றி அங்கே அழுந்தத் தழுவிக்
கொண்டனர். அப்பொழுது நிற்றற் குரிய நெறியில் உலகுகளை நிறுத்தும்
ஆணையையும் மிக்க புகழையும் உடைய ஐயனார் அவர்களுக்கு தோன்றினர்.

ஐயனார் இறைவன் அருள்பெறல்

ஆயபின் கேசவன் வெள்கி அண்டர்கோன்
சேயதாள் தொழுதுதன் உலகஞ் சேர்ந்தனன்
பாய்புகழ்ச் சாத்தனும் பகவன் தாளிணை
வாயினால் துதிசெய்து வணங்கி வேண்டுவான்.      24

     பின்னர் மாயவனார் நாணிப் பெருமானைத் தொழுது தன்
இருக்கையைச் சேர்ந்தனர். ஐயனாரும் பிரானை வணங்கிக் குறையிரப்பர்.

அரில்அறச் செய்பணி அருளி நின்னருட்
குரியபே ரிறைமையும் உதவ வேண்டுமால்
கருவிடம் பருகிய களைகண் எந்தைநின்
திருவடிச் சார்புடைச் சிறிய னேற்கென.           25

     ‘விடத்தைப் பருகிய பற்றுக்கோடாகிய எந்தையே! திருவருளையே
துணையாகப் பற்றியுள்ள சிறியேனுக்குக் குற்றமற்ற தொண்டினையும்,
அருளுக்குரிய பெருந்தலைமையையும் வழங்க வேண்டும்’ என்று யாசிப்ப,

மறைமிடற் றெம்பிரான் இயம்பும் மைந்தகேள்
இறைமைநம் அருளினால் எய்தற் பாலதாம்
அறைதரும் அருளும்மெய் யன்பின் ஆவதப்
பொறைகெழு பத்தியும் பூசைப் பேறரோ.          26

     திருநீலகண்டப் பெருமானார் அருளுவர்; ‘மைந்தனே! கேட்டி.
பூசையின் பயனாக மெய்யன்பு தோன்றும். அம்மெய்யன்பினால் திருவருட்
பேறு வாய்க்கும். அத்திருவருளாற்றலைமை தாங்கும் பேறு உண்டாம்.

பூசையா வதுசிவ லிங்க பூசைஅத்
தேசமை அருச்சனைக் கிடனுஞ் சீர்த்திசால்
ஆசறு தலங்களாம் அங்க வற்றினும்
காசிமற் றதனினுங் காஞ்சி மாநகர்.              27