|      பூசனை என்னிற் சிவலிங்க பூசனையே ஆகும். ஒளியமைந்த    அப்பூசனையும் புகழ்ச்சியமைந்த குற்றமற்ற தலங்களிற் செயற்குரிய
 ஆகும். அத்தலங்களின் மிக்கது காசி. அக்காசியினும் காஞ்சி மிக்கது.
 		| கண்ணகன் புரிசைசூழ் காஞ்சி வைப்பிடைப் புண்ணியச் சிவக்குறி நிறுவிப் பூசித்து
 விண்ணவர் தவமுனி வேந்தர் யாவரும்
 எண்ணரும் பேறுபெற் றின்பம் நீடினார்.         28
 |       இடங்கொண்ட மதில் சூழ்ந்த காஞ்சி நகர்க்கண் புண்ணியத்தைத்    தருகின்ற சிவலிங்கம் நிறுவிப் பூசித்து விண்ணோரும், முனிவரரும்,
 அரசரும், பிறரும் எண்ணரிய வரங்களைப் பெற்று இன்பத்தில் நிலைத்தனர்.
 		| ஆயிடை நீஎமை அருச்சித் தேத்துதி மாயிருந் தலைமைநாம் வழங்கு கேமெனச்
 சேயிழை பங்கினான் அருளிச் செய்தனன்
 காயிலைப் படையவன் காஞ்சி நண்ணினான்.      29
 |       ‘அங்கு நீ எம்மை அருச்சனைசெய். மிகப் பெருந்தலைமை நாம்     வழங்குவோம்’ என்று சேயிழையாளைப் பாகங்கொண்டவர் அருளினர்.
 வெல்லுகின்ற இலையை ஒக்கும் படையினராகிய சாத்தனாரும் காஞ்சியை
 நண்ணினர்.
 		| உருகெழு பனிவரைப் பிராட்டி ஒண்மலர்த் திருவடிச் சுவடுதோய் செல்வக் காஞ்சியின்
 மருவிவேற் கடவுளை வழுத்தி ஆங்கவன்
 அருளினாற் சிவக்குறி நிறுவி அர்ச்சித்தான்.                        	30
 |       வடிவுடைய அம்மையார் திருவடிகளின் சுவடுகள் பதிந்த செல்வத்தைப்    பெற்ற காஞ்சியில் குமரகோட்டப் பிரானைப் போற்றி அவரருளைப் பெற்றுப்
 பின்பு சிவலிங்கம் இருத்தி அருச்சனைப் புரிந்தனர்.
 		| மறைமுதல் விடைமிசைத் தோன்றி மற்றவற் கறைகழல் இமையவர் அருகு சூழ்தர
 முறைகெழு பூதங்கள் முழுதுங் காப்புறும்
 இறைமையின் மணிமுடி இனிது சூட்டினான்.        31
 |       வேதமுதல்வர் விடைமேற் றோன்றித் தேவர் சூழப் பூத கணங்களைக்    காவல் செய்யும் தலைமைக் குரிய மணிமுடியை இனிதுபடச் சூட்டினர்.
 |